“பைத்தியம் என்று என்னை ஒரு வருடம் வீட்டில் அடைத்து வைத்தார் ஆமீர் கான்'' -சகோதரர் பைசல் கான் கோபம்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சகோதரர் பைசல் கான் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது சகோதரர் ஆமீர் கான் மற்றும் குடும்பத்தினர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

பைசல் கான் அளித்திருந்த பேட்டியில், ”என்னை எனது குடும்பத்தினர் பைத்தியம் என்று சொன்னார்கள். அதற்காக எனக்கு கட்டாயப்படுத்தி சிகிச்சையும் கொடுத்தார்கள். ஆமீர் கான் என்னை ஒரு வருடம் வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்தார்” என்று குற்றம் சாட்டி இருந்தார்.

ஆனால் இதற்கு ஆமீர் கான் குடும்பம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. தற்போது பைசல் கான் வெளியிட்டுள்ள பேட்டியில் தனது குடும்பத்தினருடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”நான் இன்றைய தேதியில் இருந்து எனது குடும்பத்தினருடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்கிறேன். மேலும், அவர்களில் எவருடைய சொத்திற்கு எந்தவொரு உரிமையும் நான் கோரமாட்டேன் அல்லது அவர்களில் எவருடைய சொத்தில் எழும் எந்தவொரு பிரச்னைக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.

இன்றிலிருந்து எனது சகோதரர் அமீர் கானின் வீட்டில் நான் வசிக்கமாட்டேன். மேலும் எனது சகோதரர் அமீர் கானிடம் இருந்து எந்தஒரு மாதாந்திர தொகையும் கோரமாட்டேன்.

கடந்த காலத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு எனது குடும்ப உறுப்பினர்களுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்.

இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2017-ம் ஆண்டு எனது குடும்ப உறுப்பினர்கள் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். எனக்கு பைத்தியம் பிடித்து இருப்பதாகவும், நான் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலானவன் என்றும் என்னை பற்றி எனது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆமிர் கான்

இதனால் வீட்டை விட்டு வெளியேறினேன். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இதில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இப்போது எனது குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் எனக்கு எதிராக சதி செய்து சமூக ஊடகங்களில் தவறான அறிக்கைகளை வெளியிட்டு என்னை களங்கப்படுத்தியுள்ளனர்.

2005 ஆம் ஆண்டு முதல் எனது வாழ்க்கையை தனிப்பட்ட முறையிலும் மற்றும் தொழில் ரீதியாகவும் எனது குடும்ப உறுப்பினர்கள் அழித்து விட்டனர். என்னை பற்றி தவறாக அறிக்கை விடும் எனது குடும்பத்திற்கு எதிராக அடுத்த மாதம் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.