மும்பை: மும்பையில் கனமழை பொழிந்து வரும் நிலையில் மின் தடை காரணமாக நடுவழியில் மோனோரயில் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பாதிக்கப்பட்டது. இதனால் அதில் பயணித்த சுமார் 400 பயணிகள் செய்வதறியாது தவித்தனர். தற்போது அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மின் தடை காரணமாக மோனோரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக மும்பை பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் தங்களது பராமரிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
“மழை காரணமாக ஹார்பர் லைன் மூடப்பட்ட நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் மோனோரயிலில் பயணித்தனர். அதன் காரணமாக ரயில் அதன் தடத்தில் இருந்து சாய்ந்தது, மேலும் மின் தடை ஏற்பட்டதாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது” என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
தீயணைப்பு படையினர் மீட்பு பணியை மேற்கொள்வதற்குள் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பயணிகள் வெளிவர முயன்றனர். மாலை 6.15 மணி அளவில் செம்பூர் மற்றும் பக்தி பூங்கா நிறுத்தத்துக்கு இடையில் மோனோரயில் சேவை பாதிக்கப்பட்டு நடுவழியில் நின்றது. ஏசி இயங்காத காரணத்தால் ரயிலில் இருந்து பயணிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சம்பவம் இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பயணிகள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவர் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இப்போதைக்கு பயணிகளை மீட்பதில் மட்டுமே அரசின் கவனம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இதுவரை சுமார் 442 பயணிகள் பாதி வழியில் நின்ற மோனோரயிலில் இருந்து பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோனோரயில்: இந்தியாவில் மும்பை நகரில் மட்டுமே மோனோரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இதன் ஒரு பெட்டியில் சுமார் 18 பயணிகள் அமர்ந்தும், 124 பயணிகள் நின்றும் பயணிக்க முடியும். மேல் உயர்ந்த பாதையில் இந்த ரயில் பயணிக்கும்.
மும்பை மழை பாதிப்புகள்: மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது. மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக மும்பையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனாவசியமாக வெளியில் வந்து வெள்ளப்பாதிப்பில் சிக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதைப் போலவே வெளியூர் செல்ல நினைப்பவர்களும் தங்களது பயணத்தை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவு மும்பை பெரு மாநகராட்சி(பிஎம்சி) பிறப்பித்துள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரம், கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 186, 208, 238 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மும்பையின் தாதர், மாதுங்கா, பாரெல், சியோன் பகுதிகளில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.