ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்யும் இந்தியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. அவர்கள் இதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். என்று பெசென்ட் விமர்சித்துள்ளார்.
பெசென்ட் இந்தியாவை விமர்சிப்பது இது முதல்முறையல்ல. கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியில், “அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், இந்தியா மீது அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கக்கூடும்” என்று பெசென்ட் எச்சரித்திருந்தார்.
கடந்த 10 நாட்களில், ஸ்காட் பெசென்ட், ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகத்திற்காக இந்தியாவை மீண்டும் மீண்டும் குறிவைத்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா போன்ற ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளை குறிவைத்து, மேலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.