புதுடெல்லி: டெல்லி மக்களின் பல்வேறு துறைகளின் குறைகளைத் தீர்க்க ’டெல்லி மித்ரா’ எனும் செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக அம்மாநில முதல்வர் ரேகா குப்தா அரசு அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தலைநகரான டெல்லி மக்கள் பல்வேறு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்ய, ஒற்றைச் சாளர அமைப்பாக இந்த செயலி அறிமுகமாகிறது. ’டெல்லி மித்ரா’ எனும் பெயரில் இந்த செயலியில் மாநில அரசு, மாநில காவல்துறை, டிடிஏ, எம்சிடி, என்டிஎம்சி ஆகியவற்றை ஒரே தளத்தில் கொண்டு வரப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த செயலில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
தற்போதுள்ள பிஜிஎம்எஸ் (பொது குறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு) படிப்படியாக புதிய தளத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதன் பிறகு, அனைத்து குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநில முதல்வர் ரேகா குப்தா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டெல்லி மித்ரா புகார்களுக்கான தளம் மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையின் டிஜிட்டல் பாலமாகும். இந்த செயலி, தேசிய தலைநகரில் வசிப்பவர்கள் தங்கள் புகார்களை அரசாங்கத்திடம் மொபைல் போன்கள் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பதிவு செய்ய உதவும். புகாரளித்தவர்களுக்கு அவர்கள் மனுவின் ஒவ்வொரு கட்டமும் தகவலாகத் தெரிவிக்கப்படும்.
இந்த செயலியின் முக்கிய அம்சம் என்னவெனில், டெல்லி அரசு, டெல்லி காவல்துறை, நகராட்சி நிறுவனங்கள் மற்றும் பிற துறைகள் தொடர்பான புகார்கள் ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் தீர்க்கப்படும். டெல்லியின் குடிமக்கள் தம் கைப்பேசி எண் மூலமாக ஓடிபி பெற்று செயலியை பயன்படுத்தலாம். ஒவ்வொரு புகாரும் ஆய்வு செய்து அதற்கு விரிவான பதில் வழங்கப்படும்.
இந்த செயலியின் மூலம் புகார் அளித்தவர்கள் தம் தீர்வு குறித்து அதிருப்தி அடைந்தால், எதிர்மறையான கருத்து தானாகவே உயர் அதிகாரிகளு க்கு தெரிவிக்கப்படும். புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றால், மறு ஆய்வுக்கான மூன்றாவது வாய்ப்பு வழங்கப்படும். குறை தீர்க்கும் அதிகாரிகள் அனைவரும், ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, குடிமக்களை நேரில் சந்திப்பார்கள். இதில் புகார்தாரரிடம் பேசி அவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.
ஒவ்வொரு புகாருக்கானப் பொறுப்பேற்கச் செய்ய, ஒவ்வொரு துறையிலும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த முயற்சி வெறும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மட்டுமல்ல, பொதுமக்களின் குரலாகக் கேட்கப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.