ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராம். செங்கல்சூளை தொழிலாளியான இவர் கொலை செய்யப்பட்டு பீப்பாயில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் மாயமான தொழிலாளியின் மனைவி சுனிதா மற்றும் 3 குழந்தைகளையும், வீட்டின் உரிமையாளரின் மகனான ஜிதேந்திரா என்பவரையும் போலீசார் தேடி வந்தனர்.
ஹன்ஸ்ராமின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதற்கிடையே மாயமான தொழிலாளியின் மனைவி சுனிதாவும், ஜிதேந்திராவும் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது ஹன்ஸ்ராம் ஜிதேந்திரா என்பவர் வீட்டில் வாடகைக்கு குடி வந்துள்ளார். அப்போது ஜிதேந்திராவுக்கும், சுனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இளம்பெண்ணான சுனிதாவை மயக்கி ஆசை வலையில் விழ வைத்தார் ஜிதேந்திரா. நீண்ட நாட்களாக இவர்கள் தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.
ஹன்ஸ்ராம் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர். இதற்கு ஹன்ஸ்ராம் இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து, உடலை பீப்பாயில் போட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தைகளை சுனிதா தனது பெற்றோரிடம் ஒப்படைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
மது குடிக்கும் பழக்கம் உள்ள ஹன்ஸ்ராமுக்கு ஜிதேந்திரா சம்பவத்தன்று மது வாங்கிக்கொடுத்துள்ளார். அவர் போதையில் இருந்தபோது சுனிதாவும், ஜிதேந்திராவும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் நீலநிற பீப்பாயில் உடலை அடைத்து அதில் உப்பை கொட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டின் மேல்கூரையில் வைத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். கோகுலாஷ்டமியையொட்டி அந்தப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்க அக்கம்பக்கத்தினர் சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை கள்ளக்காதல் ஜோடி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.
இந்த தகவல்கள் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.