வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நமக்கு தெரிந்தவரோ, தெரியாதவரோ, பணக்காரரோ, ஏழையோ அனைவரிடத்திலும் மரியாதையாக நடந்து கொள்வது என்பது ஓர் ஆகச் சிறந்த பண்பு. ஆனால் இன்று நாம் அவ்வாறு நடந்துகொள்கின்றோமா?
பெரும்பாலான மனிதர்கள் தங்களை விட உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடம் மட்டுமே மரியாதை என்பதை வெளிப்படுத்துகின்றனர்.
ஒருவர் இருக்கின்ற பொழுது அவரிடம் மரியாதையாய் பேசிவிட்டு, அவர் சென்ற பிறகு அவரை மட்டம் தட்டி பேசுவது சகஜமாகிவிட்டது. தலைவர்கள், தியாகிகள், பிரபலங்கள் என்ன அனைவரையும் ஒற்றை படையில் அழைப்பதும் வழக்கமாகிவிட்டது.
இதைத்தான் நம் மரபில் இருந்து நாம் கற்றுக் கொண்டோமா? அல்லது இதைத்தான் நம் பிள்ளைகளுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு நாம் கற்பித்துக் கொண்டு இருக்கிறோமா?

சரி, முதலில் மரியாதை என்றால் என்ன என்று பார்ப்போம்:
உறவுகளின் அசைக்க முடியாத தூண் மரியாதை. அது சக மனிதரை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களையும், நம் இயற்கையையும் மதிப்பது. அவற்றின் உணர்வுகளையும், உரிமைகளையும் அங்கீகரிப்பது. இது வயது, அந்தஸ்து, செல்வம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் மக்களை கண்ணியத்துடன் நடத்துவதைப் பற்றியது.
சற்று சிந்தித்து பாருங்கள், உங்களை ஒருவர் மதிக்கவில்லை என்றால், உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றால், அவர்களுடன் உங்கள் உறவை நீட்டித்துக் கொள்வீர்களா? அல்லது விலகி விடுவீர்களா? கண்டிப்பாக விலகிவிடுவோம்தானே..
ஏன் நாம் ஒருவருக்கு மரியாதை கொடுப்பதில்லை?
இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்கு மரியாதை வேற கொடுக்கனுமா? சரிதான், மிக மோசமானவர்களையும், ஒழுங்கீனமானவர்களையும், கடுமையான தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என்ற அளவுக்கு குற்றங்களை செய்தவரையும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சொல்லவில்லை.
ஆனால் நம் அகங்காரத்தாலும், ஆணவத்தாலும் பிறரை மதிக்காமல் இருப்பது சரி அல்லவே.
ஒருவரை பார்த்தவுடன் இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம், பின் அவரை பற்றி தெரிந்த பின்பு “அட இவர் கிட்ட மரியாதை இல்லாம பேசிட்டோமே” என்று வருத்தப்படுகிறோம். சமூக ஊடகங்களில் நல்ல மனிதர்களை ட்ரோல் செய்வது, கடுமையான கருத்துக்களை பதிவிடுவது, அவர்களை அவமதிப்பது மிக இயல்பாகிவிட்டது.

உதாரணத்திற்கு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்த ஒரு மனிதரை ட்ரோல் செய்து செய்தே ஒன்றுமில்லாமல் ஆக்கிய கூட்டம் தானே நாம். அவர் இறந்த பிறகு, இப்படி பட்ட மனிதர்களை இனி பூமியில் காண முடியுமா, அவரின் நல்ல குணத்தை மதிக்காமல் தவறு செய்து விட்டோம் என்ன வருந்தி என்ன பயன்? ஒரு சக மனிதராக அவரின் கொள்கைகளை மதித்து, அவருக்கு மரியாதை கொடுத்திருந்தால்.. மக்களுக்காக சேவை செய்த ஒரு நல்ல அரசியல் தலைவர் என வரலாறு அவர் பெயரை தன் பக்கங்களில் பதித்திருக்கும். (ஒரு நல்ல மனிதன் என வரலாறு எப்போதும் அவர் பெயர் சொல்லும்) யாரென்று உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அதேபோல, நான் எடுக்கும் முடிவு தான் சரி என்ற மனநிலையில் உள்ளவர்கள் எப்போதும் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை. இது பல நேரங்களில் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியம்.
நாம் எடுக்கும் முடிவுகள் எல்லா நேரங்களிலும் சரியாக இருந்து விடுவதில்லை, மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து கேட்கும் போது சில நேரங்களில் அடடா இந்த கோணத்தில் நாம் யோசிக்க வில்லையே என்ற எண்ணம் தோன்றலாம், நல்ல முடிவுகளை எடுக்க இது உதவலாம்.
அலுவலகத்தில் தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுக்கும் மேல் அதிகாரிகள், எங்கே இவன் நமக்கு மேலே வந்து விடுவானோ என்ற பொறாமை காரணமாக அவரை மதிக்காமல் நடந்து கொள்கின்றனர்.
அலுவலகத்தை விடுங்கள்.. நம் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? நீங்கள் நன்றாக கவனித்தால் குழந்தைகள் சில நேரங்களில் நல்ல யோசனைகளை கூறுவார்கள், ஆனால் நாம் அதை பாராட்டாமல், உனக்கு ஒன்னும் தெரியாது நீ இன்னும் சின்ன குழந்தைதான் என்று அவர்களை அதட்டி விடுவோம்.
இவ்வாறு செய்வதால், “நாம என்ன சொன்னாலும் நம்ம அப்பா அம்மா கேட்க மாட்டாங்க, நம்மள மதிக்கமாட்டாங்க” என்ற முடிவுக்கு நம் பிள்ளைகள் சென்றுவிடுகிறார்கள். இனி நாம் ஏதும் சொல்ல கூடாது என்று அவர்களது கருத்தை அவர்கள் கூறுவதே இல்லை. இது காலப்போக்கில் வீட்டில் மட்டுமல்ல அதை தாண்டி பள்ளியில், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் அவர்களது கருத்துக்களை கூற ஒரு தயக்கம் அவர்களிடம் இருக்கும்.
மாறாக, ஒரு முறை அவர்களை பாராட்டி பாருங்கள், அட நல்ல யோசனையா இருக்கே என்று சொல்லிப்பாருங்கள், அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. மேலும் அவர்கள் நல்ல யோசனைகளை, கருத்துக்களை தயக்கமில்லாமல் கூற இது வழிவகுக்கும். நம் குழந்தைகளை நாம் முதலில் மதிக்க வேண்டும்.

மரியாதை ஏன் முக்கியமானது?
ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் நடந்து கொள்வது இருவரிடத்திலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
மரியாதையாக நடந்து கொள்வது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கும்.
மக்கள் தங்களை மதிப்பவர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களின் செயல் திறன் அதிகரிக்கிறது.
நாம் மற்றவரை எவ்வாறு நடத்துகிறோம் என்பதிலிருந்துதான் குழந்தைகள் மரியாதையை கற்றுக்கொள்கின்றனர் .
மரியாதை என்பது வயதாலோ அல்லது அதிகாரத்தினாலோ மட்டும் சம்பாதிக்கப்படுவதில்லை, அது நம் சொந்த குணத்தின் அடையாளம். உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்களோ அதை விட சிறப்பாக நீங்கள் மற்றவர்களை நடத்துங்கள்.
மரியாதை ஒரு பழக்கமாக மாறும் போது, பணிவும்,கருணையும் அதிகரிக்கும், நல்லிணக்கம் நம் வாழ்க்கை முறையாக மாறும்.
நன்றி,
அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..
நரேந்திரன் பாலகிருஷ்ணன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!