தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், “மாபெரும் அரசியல் ஆளுமை, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றி தலைவர் விஜய்க்கு முதல் வணக்கம்.
சுமார் ஓராண்டுக்கு முன்பு விக்கிரவாண்டி வி.சாலையில் முதல் மாநாடு நடத்தினோம். அன்று நம் மனதில் இருந்து எண்ணங்களை, ஆசைகளை, தலைவரோடு பகிர்ந்து கொண்டோம். தலைவர் விஜய் தொடங்குவது கட்சியல்ல. அது ஒரு புரட்சி எனக் கோடிக்கணக்கான மக்கள் படை நம்முடன் நிற்கிறது.
இதற்குப் பெயர்தான் சத்தமில்லாமல் சாதனை செய்வது. அதேபோல இன்று தலைவரின் ஆலோசனையின் அடிப்படையில் மதுரை மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநாட்டில் இருக்கிறோம். இத்தனை லட்சம் மக்களைப் பார்க்கும் போது ஒரே வார்த்தைதான் தோன்றுகிறது. அதுதான் வெற்றி.
இந்த மதுரை மாநாடு பெரும் வெற்றியடைந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போதே தெரிகிறது. சில நல்லவர்கள் ‘வட தமிழ்நாட்டில் கூட்டம் வந்தது… தென் தமிழ்நாட்டில் கூட்டம் வருமா’ எனக் கேட்டார்கள். அவர்களிடம் நான் கேட்டேன் தம்பி வருவது யாரென்று தெரிந்துமா இந்தக் கேள்வி கேட்கிறாய். தமிழ்நாட்டுத் தாய்மார்களின் செல்லப்பிள்ளைதான் விஜய் என்றேன்.
மாநாட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்பே குடும்பம் குடும்பமாக எந்தத் தலைவரின் மாநாட்டுக்கும் கூட்டம் வராது. ஆனால் இந்தத் தலைவருக்காக வந்தது. தலைவரின் சிரித்த முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் இந்த ஆனந்த்தின் நெஞ்சம் ஆனந்தமடைகிறது.
இன்றைய அரசியல் ஆளுமை, நாளைய முதல்வர். உங்களுக்குப் பின்னால் இருப்பது பாசத்திற்குக் கட்டுப்படக்கூடிய ராணுவப்படை. இப்படை தோற்கின் எப்படி வெல்லும். இன்றைய மாநாடு நாம் அடுத்துச் செய்யப்போகும் வேலைகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தலைவரின் ஆணைகளை நிறைவேற்றுவோம்.
தமிழக அரசியலில் மாபெரும் சாதனைகளைப் படைப்போம். நமக்குத் தலைவரின் வார்த்தைதான் வேதம், தலைவரின் சொல்லே மந்திரம். தலைவரே நீங்கள் ஆணையிடுங்கள் அது நடந்து விடும்.
கழக கண்மணிகளே, நாம் இன்னும் வேகமாக வேலை பார்த்து, வியர்வை ஆறில் குளித்து, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். நம் லட்சியம் ஒன்றுதான்.
இந்த மண்ணும், மக்களும் நல்ல முறையில் வாழ வேண்டும். அதற்கு நம் தலைவர்தான் நாட்டை ஆள வேண்டும். அவர் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும். இந்த மாநாடு நம்முடைய எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அருமைக்கும்.” என்றார்.