புதுடெல்லி: தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர்.
இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தம்பதியின் இளைய மகன் சித்தார்தை (22) காணவில்லை. இவரே மூவரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறை (தெற்கு) துணை ஆணையர் அங்கிட் சவுகான் கூறுகையில், “விசாரணையில் சித்தார்த் மனநல சிகிச்சையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் ஒருவரிடம், தனது குடும்பத்தை கொலை செய்துவிட்டதாகவும், இனி இங்கு வாழ மாட்டேன் என்றும் கூறியுள்ளார். சித்தார்த்தை நாங்கள் தேடி வருகிறோம்” என்றார்.