சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி ஒருவரை தற்போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சட்டம்- ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபிக்கள் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினித்தேவ் வான்கடே என அடுத்தடுத்து பட்டியலி்ல் உள்ளனர்.
வழக்கமாக புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி பணியிடம் காலியாக உள்ள 3 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகுதியான 8 பேரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கும். அதில், 3 பேர் பட்டியலை ஆணையம் தமிழக அரசுக்கு மீண்டும் அனுப்பும். அதில், ஒருவரை தமிழக அரசு புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும். இதுதான் நடைமுறை. ஆனால், இந்த முறை அப்படி 8 பேரின் பட்டியல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு தங்களுக்கு சாதகமானவர் இருக்க வேண்டும் என விரும்புவதால் புதிய டிஜிபி நியமனத்தை விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதற்கு ஏதுவாக தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவது உறுதி ஆகிவிட்டது.
அடுத்த கட்டமாக பிரமோத்குமாருக்கு இன்னும் ஒரு மாதமே பதவிக்காலம் உள்ளது. அடுத்ததாக சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், இந்த நடைமுறையும் தொடங்கப்படவில்லை. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக உள்ள அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபியாகலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால், அதிலும் முடிவு எட்டப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சட்டம்- ஒழுங்கு டிஜிபி விவகாரத்தில் ‘பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது, பொறுப்பு டிஜிபி நியமிக்க கூடாது’ என வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு புதிய டிஜிபி நியமன நடைமுறைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் புதிய டிஜிபி நியமிக்கும் வரை பொறுப்பு டிஜிபியை நியமிக்கும் முடிவில் தமிழக அரசு உள்ளதாகவும், அதுவும் இணக்கமாக உள்ள நிர்வாகப் பிரிவு டிஜிபியான வெங்கடராமன் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுவும் 3 முதல் 6 மாதத்துக்கு பின்னர் தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் என்பதால், தேர்தல் ஆணையம் யாரையாவது ஒருவரை சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும். அதுவரை இதை தொடரலாம் எனவும் தமிழக அரசு விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.