விஜய் அரசியல் நடிகராக இல்லாமல் மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்: பாஜக

சென்னை: நடிகர் விஜய் அரசியல் நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் “உங்கள் விஜய்–எளியவனின் குரல் நான்” என சமூக வலைத்தளத்தில் செல்பி பகிர்ந்துள்ள நடிகர் விஜய் முதலில் திருவள்ளுவரின் திருக்குறளையும், பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும், இந்திய அரசியல் சாசன சட்டத்தையும், பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா எழுதிய ஏகாத் மாணவ தர்ஷன் மனிதநேய இலக்கணத்தையும் நன்கு புரிந்து படிக்க வேண்டும்.

நடிகர் விஜய் அதிகார அரசியலுக்காக, சினிமா விளம்பர பாதையில், முதல்வர் நாற்காலி போதையில், முழு நேர அரசியல் நடிகராக செயல்பட்டு வருவது தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது. விக்கிரவாண்டியை தொடர்ந்து, மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டிலும் நடிகர் விஜயின் வீர வசனங்கள் அடங்கிய உரை ஒரு அரசியல் திரைப்படத்தை பார்ப்பது போலவே இருந்தது.

நடிகர் விஜய் போன்ற இளைய தலைமுறையினர் மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள், அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அந்த அடிப்படையில் நடிகர் விஜய் அவர்களை பாஜக வரவேற்றது. பாஜக தலைவர்களும் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும், குறிப்பாக மாணவர்களின் நலன் காக்கும் மத்திய அரசின் நீட் கல்வி திட்டத்தை மிகத் தவறாக விமர்சனம் செய்த போது கூட பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வைக்காமல் தெளிவான விளக்கங்களை தொடர்ந்து அளித்து வந்தனர். அரசியலுக்கு புதிதாக வந்தவர் விரைவில் புரிந்து செயல்படுவார் என்று பொறுமை காத்தனர்.

ஆனால் மதுரை மாநாட்டு பேச்சின் மூலம் தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு வங்கிக்காகவும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் செபாஸ்டின் சைமனின் மறு உருவமாக, அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்கி வருகிறார் என்பது மட்டும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

நடிகர் விஜய், தன்னை தமிழக முதல்வராக அடையாளம் காட்டிக் கொள்வதற்கு கட்டமைக்கப்பட்ட விளம்பரம், மாநாட்டு மேடை, என மாநாட்டின் பிரம்மாண்டத்திற்கு காட்டி வரும் அக்கறையை மக்கள் விரோத தீய சக்தி திமுக அரசால் மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?

விஜய் முதலில் அரசியலில் நடிப்பதை விட்டுவிட்டு மக்களின் பிரச்சினைகளை திமுக அரசின் தவறுகளை, அனைத்து துறையிலும் நடக்கும் அதி பயங்கர ஊழல்களை, பொய் வாக்குறுதிகளை, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை, விலைவாசி உயர்வுகளை உணர்ந்து, முதல்வர் ஸ்டாலினின் அலங்கோலக் கொடூர அராஜக ஆட்சியில் மக்கள் படும் திண்டாட்டங்களை , பிரச்சினைகளையும் , புரிந்து கொண்டு, தவறுகளை தட்டிக் கேட்கும் வகையில், தமிழக மக்களின் நலன் காக்கும் அரசியல்வாதியாக தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டு வகையில் அரசியல் நிலைபாடுகளை எடுக்க வேண்டும்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடத்தில் திடீர் முதல்வராக கற்பனை செய்து கொண்டு அரசியல் தராதரம் இல்லாமல், முதிர்ச்சியற்ற வகையில் மிஷனரி வார் ரூம் எழுதிக் கொடுத்த வசனத்தை எகத்தாளமாக பேசும் போக்கு கண்டிக்கத்தக்கது. பாரத பிரதமர் நரேந்திர மோடியை “மிஸ்டர் பி.எம்” என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினை “அங்கிள்” என்றும் வாய்க்கு வந்தபடி வரைமுறை இல்லாமல் மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

தமிழக மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளாக மதுரை கூட்டத்தில் நடிகர் விஜய் பேசிய அனைத்து விஷயங்களையும், அவருடைய கடந்தகால பிளாஷ்பேக்கில் நீண்ட காலமாக, மக்களுடைய, ஏழை ரசிகர்களுடைய பணத்தில் பல கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு நடிகராக இருந்து கொண்டு எதையுமே இத்தனை காலமாக கண்டுகொள்ளாமல் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி முதற்கொண்டு இன்று அவர் எதிர்க்கின்றதாக கூறும் பல அரசியல் தலைவர்களின் மற்றும் பண முதலைகளின், லாட்டரி கொள்ளைக்காரர்களின் அடிமை நடிகராக நடித்து வாழ்ந்ததை மறக்க முடியுமா?

நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களின் ரிலீஸ் வெற்றிகரமாக நடக்க மண்டியிட்ட வரலாறுகளை மறக்க முடியுமா? இன்று ஏதோ மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வந்த மாமனிதராக உங்களை முன்னிறுத்திக் கொண்டு மக்களை காக்க வந்த இரட்சகர் போல வேஷம் போடுவதை மறுக்க முடியுமா?

நடிகர் விஜய் சிறுவயதில் நடிகராக வேண்டும் என்று அவரின் பெற்றோர் ஆசைப்பட்டனர். நல்ல நடிகராக வெற்றி பெற்று விட்டார். ஆனால் இன்னும் நீங்கள் நல்ல மக்கள் அரசியல்வாதியாக மாறவில்லை உணர்ந்து கொள்ளுங்கள். பெற்றோரின் முதல்வர் கனவுக்காக, வெளிநாட்டு மிஷனரிகளின் பிரிவினைவாத மதவாத அரசியலுக்காக, அவரின் சுயநல அரசியலுக்காக, ஏழை அப்பாவி இளைஞர்களை, சிறுபான்மை மக்களை ஏமாற்றி தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என்கிற உங்களின் பொய்க் கணக்கு பலிக்காது.

அண்ணா,எம்ஜிஆர், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை பாராட்டுவதாலும், கொள்கை தலைவர்கள் என்று சாதிக்கு ஒரு தலைவர்களாக தமிழகத்திற்கு தியாகங்கள் செய்த தலைவர்களையும், தமிழகத்திற்கு துரோகம் செய்த திரு ஈவேரா ராமசாமி படத்தையும் போட்டு, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் வீரத்தையும் தியாகத்தையும் படிக்காமல், மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக நீங்கள் நடத்தும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

இனியாவது வருகின்ற காலங்களில் விளம்பர அரசியலுக்காக, உலக அரசியலுக்கே வழிகாட்டி மேக்கமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியையும், உலகத்தின் தலைசிறந்த மக்கள் நலம் சார்ந்த தொண்டு துண்டு நிறுவனங்களின் முதன்மை அமைப்பாக விளங்கும் புனிதமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் விமர்சித்து வெளிநாட்டு மிஷனரி திருப்தி செய்து வருமான அரசியலுக்காக நாடகம் நடத்துவதை விட்டுவிட்டு, தமிழக வெற்றி கழகத்தையும், அதை நம்பி வந்த லட்சக்கணக்கான இளைஞர்களையும் நல்வழிப் பாதையில் செயல்பட வேண்டும்.

நடிகர் விஜய் இனி காலை முதல் இரவு வரை தன்னுடைய சிந்தனையை, உழைப்பை தன்னை நம்பி வந்த லட்சகணக்கான தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழக மக்களின் மகிழ்ச்சிக்காகவும் தீய சக்தி திமுகவை வீழ்த்தும் வகையில் உண்மையுடன், நேர்மையுடன் அரசியல் பணி ஆற்ற வேண்டும்.

தமிழகம் மட்டுமின்றி வருங்காலத்தில் தேசிய அரசியலிலும் நடிகர் விஜய் தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையை நம்பிக்கையை பெறக்கூடிய மிக சிறந்த அரசியல் தலைவராக உருவாவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.