பிஹாரில் SIR மூலம் ஏழைகளின் வாக்குகளை திருட பிரதமர் மோடி விரும்புகிறார்: ராகுல் காந்தி

அராரியா(பிஹார்): பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் ஏழைகளின் வாக்குகளை திருட பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அராரியா என்ற நகரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ராகுல் காந்தி, “விழிப்புணர்வு யாத்திரை மிகவும் வெற்றிகரமாக உள்ளது. மக்கள் இயல்பாக இதில் இணைகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக நாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை மக்கள் ஏற்கிறார்கள். சரியான வாக்காளர் பட்டியலை வழங்குவது தேர்தல் ஆணையத்தின் பணி. ஆனால், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகாவில் அப்பணியை செய்ய தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் முழு அளவில் அழுத்தம் கொடுக்கிறோம். இதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.

பிஹாரில் உயிரோடு உள்ளவர்களையும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களாக அறிவிக்கிறார்கள். இத்தகைய பெயர்களை நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம். தற்போது குழந்தைகள்கூட வாக்கு திருட்டு என கூறுகிறார்கள். தேர்தல் ஆணையம் குழந்தைகளிடம் பேச வேண்டும்

பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின்(SIR) மூலம் ஏழைகளின் வாக்குகளை திருட பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அமைப்பு ரீதியில் வாக்குகளை திருடும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியே சிறப்பு தீவிர திருத்தம். அரசியலமைப்புக்கு எதிரான சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம், பிஹாரில் வாக்குகள் திருடப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

பிஹாரில், இண்டியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். என, தேர்தல் முடிவு சாதகமாக இருக்கும்” என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சிராக் பாஸ்வான் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தேஜஸ்வி யாதவ், “பிரச்சினைகளை நாங்கள் எழுப்புகிறோம். அது குறித்த விவாதங்களை நாங்கள் விரும்புகிறோம். சிராக் பாஸ்வான் ஒரு பிரச்சினை அல்ல. பொதுமக்களும் அவரைப் பற்றி பேசுவதில்லை. அவரை எனது மூத்த சகோதரனாகக் கருதி அவருக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.

அருகில் இருந்த ராகுல் காந்தி, இது எனக்கும் பொருந்தும் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.