இது சரியில்லை! கம்பீருக்கு கேள்வி எழுப்பிய அஸ்வின்! நடந்தது இது தான்!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அதில் இருந்து அணியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டி20க்கு புதிய கேப்டன், சீனியர் வீரர்கள் ஓய்வு என்று பல்வேறு சர்ச்சைகள் தற்போது இந்திய அணிக்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அணிக்குள் புதிய ஃபிட்னஸ் முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புதிய மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது கவலையையும், எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்படி வீரர்களின் பயிற்சி முறைகளை மாற்றுவது, வீரர்களுக்கு காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டி உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“பிரான்கோ டெஸ்ட்” அறிமுகம்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை அளவிட பல ஆண்டுகளாக “யோ-யோ டெஸ்ட்” இருந்து வந்தது. இந்நிலையில், கவுதம் கம்பீரின் புதிய பயிற்சிக்குழு, யோ-யோ டெஸ்டுடன் சேர்த்து “பிரான்கோ டெஸ்ட்” என்ற புதிய உடற்தகுதி முறையையும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதி போதுமானதாக இல்லை என்று அணி நிர்வாகம் கருதியதே இந்த புதிய மற்றும் கடுமையான சோதனையை அறிமுகப்படுத்த காரணம் என்று கூறப்படுகிறது. அணியின் புதிய உடற்பயிற்சி மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளரான அட்ரியன் லே ரூக்ஸ் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

பிரான்கோ டெஸ்ட் என்றால் என்ன?

ரக்பி மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த பயிற்சியில், வீரர்கள் 20 மீட்டர், 40 மீட்டர் மற்றும் 60 மீட்டர் ஓட்டங்களை ஐந்து செட்களுக்கு இடையில், நிறுத்தாமல் ஓட வேண்டும். மொத்தமாக 1,200 மீட்டர் தூரத்தை எவ்வளவு விரைவாக கடக்கிறார்கள் என்பதை பொறுத்து, அவர்களின் ஏரோபிக் உடற்தகுதி மற்றும் மீண்டு வரும் திறன் ஆகியவை கணக்கிடப்படும். 

அஷ்வின் எச்சரிக்கை

இந்த புதிய பயிற்சி மாற்றம் குறித்து, தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், “பயிற்சியாளர்கள் மாறும்போதெல்லாம், உடற்தகுதியை சோதிக்கும் முறைகளும் மாறுகின்றன. பயிற்சி திட்டங்களும் மாறுகின்றன. இப்படி அடிக்கடி பயிற்சி முறைகளை மாற்றிக்கொண்டே இருப்பது, வீரர்களுக்கு மிகவும் கடினமானது. பல சமயங்களில், இது காயங்களுக்கும் வழிவகுக்கும். 2017 முதல் 2019 வரை, எனக்கான சரியான பயிற்சி முறையை நான் தேடிக்கொண்டிருந்தேன். இந்த கொடுமையை நான் அனுபவித்துள்ளேன். இது பற்றி, முன்னாள் பயிற்சியாளர் சோஹம் தேசாய்க்கு நன்றாகத் தெரியும்,” என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அஷ்வின், “ஒரு வீரராக தொடர்ச்சி இல்லாததுதான் இங்குள்ள பிரச்சினை. எனக்கு உண்மையிலேயே ஒரு தொடர்ச்சி வேண்டும். புதிய பயிற்சியாளர் ஒருவர் வரும்போது, அவர் பணியிலிருந்து வெளியேறும் பயிற்சியாளருடன் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இணைந்து பணியாற்றி, பொறுப்புகளை முறையாக கையளிக்க வேண்டும். இந்த தொடர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். ஒரு விஷயம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், அது குறித்து விரிவாக விவாதித்து அதன் பிறகே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்,” என்று கௌதம் கம்பீர் மற்றும் அவரது குழுவினருக்கு அஷ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.