உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படுகொலை தொடர்பாக நிக்கியின் கணவர் விபின், அவரது தாயார் மற்றும் மைத்துனர் ரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிக்கியை எரித்துக்கொலை செய்த அவரது கணவர் விபினை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்று நிக்கியின் தந்தை மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் விபின் போலீஸ் காவலில் இருந்து தப்பிச்செல்ல முயன்றதாக கூறி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் விபின் காலில் காயம் அடைந்தார்.
விபினிடம் போலீஸார் விசாரித்தபோது கொலைக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ”சம்பவம் நடந்த அன்று நிக்கி தனது கணவரிடம் தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரை திறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு விபின் அனுமதி கொடுக்கவில்லை.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நிக்கி தானும், தனது சகோதரியும் சேர்ந்து பியூட்டி பார்லரை திறப்போம் என்றும், தங்களை யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவது, பியூட்டி பார்லர் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று விபின் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நடந்த சண்டையில் நிக்கி தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.
இன்ஸ்டா, யூடியூப் சேனல் நடத்திய சகோதரிகள்
நிக்கியும், அவரது சகோதரி காஞ்சனும் சேர்ந்து யூடிப் சேனல் நடத்தி வருகின்றனர். இருவரும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்கள்.
Makeover by Kannchan என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 54 ஆயிரம் பாலோவர்கள் இருக்கின்றனர். காஞ்சனின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22 ஆயிரம் பாலோவர்கள் இருக்கின்றனர்.
நிக்கியின் சகோதரர் குர்ஜார் இது குறித்து கூறுகையில், ”நிக்கியின் பியூட்டி பார்லருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.8 லட்சம் செலவு செய்திருக்கிறோம்.

விபின் மற்றும் அவரது சகோதரருக்கு வேலை கிடையாது. வீட்டில் சிறிய அளவில் மளிகை கடை நடத்துகின்றனர். எனது சகோதரிகள் தங்களது கணவர்களிடம் பணம் கேட்காமல் சொந்தமாக குழந்தைகளின் படிப்பு செலவை பார்த்துக்கொள்கின்றனர்.
ஆனால் விபின் குடும்பத்தினர் பியூட்டி பார்லர் நடத்த அனுமதிக்கவில்லை. அதோடு கடந்த பிப்ரவரி மாதம் பியூட்டி பார்லரையும் சேதப்படுத்திவிட்டனர்” என்று தெரிவித்தார்.
விபின் தந்தை மற்றும் மைத்துனரும் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நிக்கியும், விபினும் திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து கடந்த 9 ஆண்டுகளாக விபின் தனது மனைவி நிக்கியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.
கொலை நடந்த அன்று நிக்கி தனது வீட்டு படிக்கட்டில் அமர்ந்திருந்த போது ஒருவர் அவர் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார். அதனை தொடர்ந்து நிக்கியை அவரது கணவர் அடித்து உதைத்தார்.
அதன் பிறகு உடம்பில் தீப்பிடித்த நிலையில் நிக்கி படிக்கட்டில் நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது நெஞ்சை பதற வைத்தது.