மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வு அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அவர் அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் இன்று ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை (பார்டர்-கவாஸ்கர் கோப்பை) வெல்ல முக்கிய பங்காற்றினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 இரட்டை சதங்கள் உட்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார். அதுபோக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த சூழலில் ஓய்வு பெற்ற அவர் கம்பீர், சச்சின், ரெய்னா உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், “புயலடித்தபோது புஜாரா சிகரமாய் உயர்ந்து நின்றவர். நம்பிக்கை மறைந்த போதும் போராடியவர். வாழ்த்துக்கள் புஜ்ஜி” என்று பதிவிட்டுள்ளார்.
சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், “புஜாரா, நீங்கள் மூன்றாவது இடத்தில் களமிறங்குவதைப் பார்ப்பது எப்போதும் உறுதியளிக்கும். நீங்கள் ஒவ்வொரு முறையும் விளையாடும்போது அமைதி, தைரியம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது ஆழ்ந்த அன்பை கொண்டு வந்தீர்கள். உங்கள் உறுதியான தொழில்நுட்பம், பொறுமை மற்றும் அழுத்தத்தின் கீழ் அமைதி ஆகியவை அணிக்கு ஒரு தூணாக இருந்தன. அதில் 2018 ஆஸ்திரேலிய தொடர் (பார்டர்-கவாஸ்கர் கோப்பை) வெற்றி தனித்து நிற்கிறது. உங்கள் அற்புதமான ரன்கள் இல்லாமல் அது சாத்தியமாகியிருக்காது. அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துகள். அடுத்த அத்தியாயத்திற்கு நல்வாழ்த்துகள். உங்கள் இரண்டாவது இன்னிங்சை அனுபவியுங்கள்!” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.
ஜாம்பவான் சேவாக், “உங்களுடைய சிறப்பான டெஸ்ட் கேரியருக்கு வாழ்த்துக்கள் புஜாரா. உங்கள் உறுதி, மனவலிமை மற்றும் கடின உழைப்பு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது, நீங்கள் அடைந்தவற்றில் மிகவும் பெருமை கொள்ளலாம். மறக்க முடியாத இரண்டாவது இன்னிங்ஸுக்கு நல்வாழ்த்துக்கள்!” என்று பாராட்டியுள்ளார்.
யுவராஜ் சிங் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், “புஜாரா எப்போதும் தன்னுடைய மனதையும் உடலையும் ஆன்மாவையும் நாட்டுக்காக கொடுத்தவர். அற்புதமான கெரியருக்கு வாழ்த்துகள் புஜ்ஜி. உங்களை மற்றொரு பகுதியில் பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னா, “அபாரமான கெரியருக்கு வாழ்த்துகள் புஜாரா பிரதர். உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் நல்வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார்.