துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவி விலகியது ஏன்? அமித்ஷா பதில்

புதுடெல்லி,

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார்.

அந்த கடிதத்தில், உடல் நலனை முன்னிட்டும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவி காலத்தில் ஜனாதிபதி எனக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதேபோன்று பிரதமர் மோடிக்கும், மந்திரிகள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை. பதவியில் இருந்த காலத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் அன்பு என்றும் என் நினைவுகளில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

எனினும், அவருடைய ராஜினாமா எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த ராஜினாமா அறிவிப்புக்கு பின்னர் அவர் பெரிய அளவில் வெளியே வரவில்லை. எந்தவித விமர்சனங்களையும் வெளியிடவில்லை. அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்பது கூட தெரியாத அளவுக்கு இருந்தது. இதனால், அவர் எங்கே இருக்கிறார்? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இதுபற்றி தேவையற்ற குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். ஜெகதீப் தன்கர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்தவர். அவர், தன்னுடைய பதவி காலத்தின்போது, அரசியல் சாசனத்தின்படி, சிறந்த முறையில் பணியாற்றியவர்.

அவருடைய உடல்நல பாதிப்புகளை முன்னிட்டு, பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த விசயத்தில் வேறு ஏதேனும் உண்டா? என நீண்ட ஆராய்ச்சி செய்ய யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அவர் கூறினார். உடல்நலம் சார்ந்த விசயங்களுக்காக தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என்றும் அதனால், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்த ராஜினாமா பற்றி அவருடைய கடிதம் தெளிவான சுய விளக்கம் அளித்திருக்கிறது. உடல்நலனை கவனத்தில் கொண்டு அவர் பதவி விலகியுள்ளார். அவர் மந்திரிகள், பிரதமர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும், அவருடைய மனதில் இருந்து நன்றி தெரிவித்து இருக்கிறார் என்று அமித்ஷா விளக்கம் அளித்திருக்கிறார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.