Team India Bronco Test: பிசிசிஐ தற்போது இந்திய அணி வீரர்களுக்கு Bronco Test என்ற பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளது. Bronco Test என்பது உடற்தகுதி மதிப்பீட்டுத் தேர்வாகும். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட சில வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பிட்னஸ் சார்ந்த பிரச்னைகள் இருந்ததால் அதை சீர்நோக்கும் விதத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வீரர்களின் உடற்தகுதியும் மேம்படும், வீரர்களின் ஏரோபிக் திறனை மேம்படும்.
Team India: இந்திய அணியில் Bronco Test
இந்த திட்டத்தின் வீரர்களுக்கு வரப்பிரசாதம் என்றாலும் இது ரோஹித் சர்மா மூத்த வீரர்களை அணியில் இருந்து ஓரங்கட்டுவதற்கான செயல் என முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். இதனால், 2027 ஓடிஐ உலகக் கோப்பைக்கு முன்னரே ரோஹித் சர்மா ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்டார். ஓடிஐ போட்டிகளில் மட்டுமே அவர் விளையாட இருக்கும் நிலையில், தற்போதும் அவர்தான் கேப்டனாக தொடர்கிறார். ஆனால் அவர் பெரியளவில் உடற்தகுதியுடன் இல்லை. 38 வயதான ரோஹித் சர்மா எளிதாக அணியில் இருந்து ஓரங்கட்ட முடியாது என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாக மனோஜ் திவாரி கூறினார்.
Team India: ரோஹித் சர்மாவுக்கு பெரிய ஆப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில், “2027ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான திட்டத்தில், விராட் கோலியை ஒதுக்கி வைப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ரோஹித் சர்மாவை எப்படி பார்க்கப் போகிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. ஏனென்றால், இந்திய கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை நான் மிகவும் கூர்ந்து கவனிப்பவன்.
சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Bronco Test, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கும், எதிர்காலத்தில் அவர்கள் (பிசிசிஐ) அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பாத ஒருவருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். இந்திய அணியின் புதிய பலம் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக அட்ரியன் லு ரூக்ஸ் கடந்த ஜூன் மாதத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் அணிக்குள் வந்த நிலையில், Bronco Test அறிமுகப்படுத்தப்பட்டது.
Team India: ஏன் திடீரென Bronco Test?
Bronco Test பரிசோதனையை ஏன் திடீரென இந்திய அணிக்குள் வந்துள்ளார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். அவர், “இந்திய கிரிக்கெட் அறிமுகப்படுத்திய உடற்பயிற்சி சோதனைகளில் Bronco Test மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் ஒரே கேள்வி, இப்போது ஏன் இதை கொண்டு வந்துள்ளார்கள்?, புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் முதல் தொடரில் இருந்தே ஏன் இதை செய்யவில்லை?, யாருடைய யோசனை இது?, இதை யார் அறிமுகப்படுத்தினார்கள்?, சில நாட்களுக்கு முன்பு இந்த Bronco Test யார் அமல்படுத்தினார்கள்?, பல கேள்விகள் உள்ளன, அதற்கு எனக்கு பதில் இல்லை.
ஆனால் ரோஹித் சர்மா தனது உடற்பயிற்சியில் மிகவும் கடினமாக உழைக்கவில்லை என்றால் அது அவருக்கு சிக்கலை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். மேலும் அவர் Bronco Test பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என நினைக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
மேலும் இது 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் Yo-Yo Test பரிசோதனை கொண்டுவரப்பட்டு சேவாக், கம்பீர், யுவராஜ் சிங்கிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதை போல் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு இந்த Bronco Test மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக மனோஜ் திவாரி சந்தேகம் எழுப்பினார்.
Team India: யோ-யோ டெஸ்ட் போல்…
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய அணியில் பிட்னஸை இன்னும் மேம்பட்ட அளவிற்கு கொண்டுச் செல்லவே Bronco Test கொண்டு வரப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆனால், இந்திய ஜாம்பவான்களான கம்பீர், சேவாக், யுவராஜ் மற்றும் பலருக்கு நடந்தது போல, சில வீரர்களை வெளியே வைத்திருக்கவும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன். 2011இல் உலகக் கோப்பையை வென்ற பிறகு, Yo-Yo Test முதன்மைபடுத்தப்பட்டது. எனவே நிறைய விஷயங்கள் இதற்குப் பின்னணியில் இருக்கின்றன. இது எனது அவதானிப்பு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எதிர்காலத்தில் பதில்கள் கிடைக்கலாம்” என்றார்.
Bronco Test என்பது வீரர்களின் ஏரோபிக் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அணி தேர்வில் இது முன்னிலைப்படுத்தப்படுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ரவிசந்திரன் அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலில் சமீபத்தில் இதுகுறித்து பேசியபோதும், Bronco Test அணி தேர்வுக்கானது இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.