சென்னை: விஜயகாந்த் பெயரை பயன்படுத்தி அவருடைய வாக்குகளை விஜய் பெற நினைத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மருத்துவ முகாம், ரத்ததான முகாமை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தள்ளுவண்டி, அயன் பாக்ஸ், தையல் இயந்திரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராமாபுரம் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம், டெல்லி தமிழ் சங்கத்துக்கு கல்விக்காக ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. தொடர்ந்து கேப்டன் முரசு புத்தகத்தையும் பிரேமலதா வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
முதல்கட்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம். மக்களிடையே அன்பும் ஆரவாரமும் கிடைத்தது. தூய்மை பணியாளர்கள் உயிரை பணயம் வைத்துதான் பணி செய்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம், பழைய ஊதியம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு வீடு தருகிறோம், கல்வி உதவித்தொகை தருகிறோம், காலை உணவு தருகிறோம் என்று அறிவித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் நன்றி சொல்வது போல் செய்திகள் போட்டு ஒரு மாயையை தான் உருவாக்கி உள்ளனர்.
விஜய் சின்ன பையனாக இருக்கும்போது இருந்தே விஜயகாந்த் அவரை பார்த்து வந்துள்ளார். எப்போதும் விஜய் எங்களுடைய பையன்தான். விஜயகாந்த் வாக்குகளை பிடிக்க விஜய் அவரை பயன்படுத்துகிறார் என்றால், அப்படி எதுவும் நடக்காது. ஏனென்றால் எங்களுக்கு என்று ஒரு கட்சி உள்ளது.
எங்கள் கட்சி 20 ஆண்டு கட்சி, எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளது. விஜயகாந்த் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. விஜயகாந்த் பெயரை சொல்லி விஜய் வாக்குகளை எடுக்கிறார் என்றால் மக்கள் அதை ஏற்றுகொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.