மும்பை,
அடுத்த மாதம் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (20 ஓவர்) இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்குள்ளானது.
குறிப்பாக சமீப காலமாக வெள்ளைப்பந்து போட்டிகளில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்வுக்குழுவை பல முன்னாள் வீரர்கள் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் நிச்சயம் இடம்பெறுவோம் என்று கருதி துலீப் கோப்பை தொடரில் மேற்கு மண்டல அணியின் கேப்டன்சி வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியில் மேற்கு மண்டலத்தை வழிநடத்த ஸ்ரேயாஸ் ஐயர்தான் முதல் தேர்வாக இருந்துள்ளார்.
இருப்பினும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தாம் தேர்வு செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்த அவர் அந்த கோரிக்கையை நிராகரித்தார். எனவே, அவர்கள் ஷர்துல் தாக்கூரை கேப்டனாக நியமித்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் சாதாரண வீரராக இடம்பெற்றுள்ளார்.
இந்த சூழலில் அவர் ஆசிய கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்படாததால் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.