“ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” – கிருஷ்ணசாமி தகவல்

திண்டுக்கல்: “ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதன்தான் எங்கள் நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு 2026 ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதால் ஏழை குடும்பங்கள் வறுமையில் சிக்குகின்றனர். குடும்ப அமைதி கெடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை தரவில்லை.

கிராமங்களில் வளர்ச்சியை காணமுடியவில்லை. குடிநீர் பிரச்சனை உள்ளது. விளாத்திகுளம் பகுதியில் இன்றும் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. இவை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இந்த அரசு புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. எந்தத் திட்டமும் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக தெரியவில்லை.

100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலைகள் தருவதில்லை. கனிம வள கொள்ளை எந்தவித கட்டுப்பாடு இன்றியும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆளுங்கட்சி, அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு ஆற்று மணல், குளத்து மண்ணை அள்ளுகின்றனர். தூத்துக்குடி இளைஞர் கவின் படுகொலை வழக்கில் கொலை செய்தவரின் தாயார் கைது செய்யப்படவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கடமையை மறந்துவிட்டு புரோக்கர் போல் செயல்படுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்காமல் போராட்ட குணத்தை மழுங்கடித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டத்தில் மட்டும் மக்கள் உணர்வுகளை மழுங்கடித்துவிட்டு வளர்ந்துவிட்டனர். வேங்கைவயல் பிரச்சனையில் இன்று வரை நீதியில்லை. விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலுக்கு சென்று இன்று வரை வழிபடமுடியவில்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. திருமாவளவன் பல விதங்களில் ஆதி திராவிடர், தேவேந்திரருக்கு பாதிப்பை ஏற்படுத்தி துரோகம் செய்துள்ளார்.

கூட்டணி குறித்து நாங்கள் தற்போது முடிவு செய்வதாக இல்லை. ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதுதான் எங்கள் நிலைப்பாடு. மாநாடு நேரத்தில் கூட்டணி குறித்து தெரியவரும். ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவாக இருக்கும். 2026 தேர்தலில் தலைகீழாக யார் நின்றாலும் 60 சீ்டடை தாண்டமாட்டார்கள். எனவே கூட்டணி ஆட்சி தான் வரும். சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு தமிழர் என்ற அடையாளம் தேவையில்லை. அவர் தேசிய கட்சியை சேர்ந்தவர். இன்றைய சமுதாயத்தில் காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தான் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.