டெல்லி: ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் ரீதியாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி இந்தச் சோதனையை அமலாக்கத் துறை நடத்தியுள்ளது.

இந்தச் சோதனை ஒரே நேரத்தில் 13 இடங்களில் நடைபெற்றாலும் கூட இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

சவுரவ் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவராவார். மேலும் அவர் டெல்லி சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர் வளத்துறை அமைச்சராகவும், டெல்லி நீர் வாரியத் துறை தலைவராகவும் இருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆகஸ்டில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா, 2018 – 19 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி ரூ.5,590 கோடி மதிப்பீட்டில், 24 மருத்துவமனைகள் கட்ட, மேம்படுத்த ஒப்புதல் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டினார்.

இந்தப் புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் பரத்வாஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் புகாரை விசாரித்த அமலாக்கத் துறை, இந்த ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. சிலவற்றில் மதிப்பீட்டை விட அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பணியும் திட்டமிட்ட காலத்துக்குள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கூறுகிறது. உதாரணத்துக்கு ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் உருவாக்க திட்டமிடப்பட்ட ஐசியு மருத்துவமனை திட்டம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 6000 படுக்கை வசதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்ட இந்த மருத்துவமனையில் பாதியளவு கூட பணிகள் முடியவில்லை என்று அமலாக்கத் துறை கூறுகிறது.

ஆம் ஆத்மி எதிர்வினை: இந்தச் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டது என டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியுள்ளார். “சவுரவ் வீடு, சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது ஏன் தெரியுமா?. பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.” என்று கூறினார்.

இதேபோல் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, “நேற்று ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு பற்றி கேள்வி எழுப்பியது. அதிலிருந்து மக்களை திசை திருப்ப அடுத்த நாளே ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்படுகிறது. எங்களது கேள்வி மிகவும் எளிமையானதே. மோடியின் பட்டச் சான்றிதழ் போலியானதா என்பதே அது. அதற்குப் பதில் சொல்வதற்கு பதில் ரெய்டு நடத்துவது ஏன்?.” என்று வினவியுள்ளார்.

டெல்லியில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ரேகா குப்தா முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.