பிஹாரில் நடைபெறும் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் ராகுலுடன் இணைந்தார் பிரியங்கா காந்தி

பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்தார்.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், சுபால் பகுதியில் இன்று நடைபெறும் யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார். ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் பிரியங்கா காந்தி, ஒரு எஸ்யுவி காரின் கூரையில் அமர்ந்தபடி மக்களை சந்தித்தார்.

யாத்திரை ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 26) மீண்டும் தொடங்கியது. இதுவரை கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கர், கதிஹார் மற்றும் பூர்னியா மாவட்டங்களை இந்த யாத்திரை கடந்துள்ளது. மேலும், இது மதுபனி, தர்பங்கா, சீதாமர்ஹி, மேற்கு சம்பாரண், சரண், போஜ்பூர் மற்றும் பாட்னா மாவட்டங்கள் வழியாக பயணிக்க இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அராரியாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணி விரைவில் ஒரு பொதுவான அறிக்கையை வெளியிடும். எதிர்க்கட்சி கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக பாடுபடுகிறார்கள். நாங்கள் சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒன்றாக இணைந்திருக்கிறோம். பரஸ்பரம் ஒருவரையொருவர் மதிக்கிறோம், இதனால் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பலனளிக்கும்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.