Asia Cup 2025: இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை, கவுதம் கம்பீர் குறித்து பேசிய துருவ் ஜூரெல்!

Cricket News In Tamil: கடந்த ஆகஸ்ட் 19 அன்று ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்தநிலையில்,  ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாத வளர்ந்து வரும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பேசியுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை 2025 vs இந்திய அணி அறிவிப்பு:

சமீபத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அந்த பட்டியலை பார்த்து பலர் சற்று ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் ஐபிஎல் 2025 இல் சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறவில்லை. இது குறித்து பல முன்னாள் வீரர்களும் கேள்விகளை எழுப்பினர். அதே நேரத்தில், 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத மற்றொரு வீரர் இருக்கிறார். அவர் தான் துருவ் ஜூரெல். 

கவுதம் கம்பீரைப் பற்றி துருவ் ஜூரெல் என்ன சொன்னார்?

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது துருவ் ஜூரெல் இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால் தொடரின் கடைசி போட்டியின் ஆடும் பதினோரு பேரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரிஷப் பந்த் காயமடைந்தால், அவர் ஐந்தாவது டெஸ்டில் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக ஜூரெல் களம் கண்டார். 

அதன் பிறகு 2025 ஆசிய கோப்பைக்கான அணிக்கான பட்டியல்  அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஜூரெலின் பெயர் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆசிய கோப்பைக்கான அணியில் துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தநிலையில், ஒரு நேர்காணலில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரைப் பற்றி துருவ் ஜூரெல் பேசும்போது, ​​”அவர் எப்போதும் என்னிடம் வந்து, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்று கூறுவார். நீங்கள் விரும்பினால், நீங்கள் என்னை அழைக்கலாம். நான் எப்போதும் உங்களுக்கு ஆதரவளிப்பேன். நீங்கள் கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள் எனக் கூறுவார். இது மிகவும் நன்றாக இருக்கிறது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உங்களிடம் இப்படிப் பேசும்போது, ​​உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது. மேலும் நீங்கள் அவரைச் சுற்றி இருந்தால், நீங்கள் எப்போதும் உந்துதலாக உணர்கிறீர்கள். நீங்கள் உற்சாகமாக உணர்கிறீர்கள்” என துருவ் ஜூரெல் கூறினார். 

ஆசிய கோப்பை 2025 அட்டவணை:

ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும். இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 10, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. 17-வது ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா நான்கு அணிகள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அடுத்த சுற்றான சூப்பர் ஃபோருக்கு முன்னேறும். வெற்றி பெரும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பைனல் செப்டம்பர் 28 ஆம் தேதி துபாயில் நடைபெறும்.

குழு A: இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன்.

குழு B: இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்கதேசம்

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.