புதுடெல்லி,
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. இந்திய அளவில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்ற நிலையில், மத்திய அரசு இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அரசியலமைப்பை மீறியதாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.
இதனிடையே, இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த சில நாட்களாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த வாதம் வருமாறு:
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா:- மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் கோர்ட்டு எந்த அளவுக்கு உத்தரவிட முடியும், அது சட்டப்படியானதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரைக்கும் நேரங்களில் கவர்னர் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
அதேபோல, மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறி மாநில அரசுகள் அரசியல் சாசன பிரிவு 32ன் கீழ் வழக்கு தொடுக்க முடியாது, ஏனெனில் இந்த பிரிவு ஜனாதிபதி, கவர்னர் ஆகியோருக்கு பொருந்தாது. மேலும், மூன்று மாதத்திற்குள்ளாக மசோதா மீது முடிவு எடுக்கவில்லை என்றால், அதற்கான காரணத்தை கூற வேண்டும் என ஜனாதிபதிக்குக் கோர்ட்டு எப்படி கூற முடியும்? ஜனாதிபதி முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் கோர்ட்டை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும்? அதேபோல கவர்னருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது. அடிப்படை உரிமைகள் மீறும் போது மட்டுமே ரிட் மனுவை தாக்கல் செய்ய முடியும். அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது. ஏற்கனவே கேட்கப்பட்ட 14 கேள்விகளுடன் மேலும் 2 கேள்விகளை சேர்க்க கூறியுள்ளார்” என்று வாதிட்டார்.