மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த தொடரில் ஆட்டத்தை மாற்றக்கூடிய (கேம் சேஞ்சர்கள்) திறமை கொண்ட இந்திய வீரர்கள் குறித்து தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அபிஷேக் சர்மா ஒரு கேம் சேஞ்சராக இருக்க முடியும். பும்ரா எப்போதும் ஒரு கேம் சேஞ்சராக இருக்கிறார். வருண் சக்ரவர்த்தி, தனது மர்மமான பந்துவீச்சின் மூலம் சாம்பியன்ஸ் டிராபியிலும் டி20 வடிவத்திலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். எனவே, இவர்கள் இந்தியாவுக்காக தனியாக போட்டிகளை வெல்லக்கூடிய கேம் சேஞ்சர்கள்” என்று கூறினார்.