பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தங்கள் விருப்பப்படி தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்குவதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.

“முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா” எனும் முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெண்களுக்கான புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு அவர்கள் விரும்பும் தொழிலை செய்வதற்காக நிதி உதவி வழங்கப்படும். இது தொடர்பான முன்மொழிவுவுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நிதிஷ் குமார் கூறினார்.

இதுகுறித்து நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2005 ஆம் ஆண்டு நாங்கள் முதன்முதலில் அரசாங்கத்தை அமைத்ததிலிருந்து, பெண்கள் அதிகாரமளிப்புக்காக விரிவாக உழைத்து வருகிறோம், அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இன்று, கடின உழைப்பின் மூலம், பெண்கள் பிஹாரின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையையும் வலுப்படுத்துகிறார்கள். இந்த சூழலில், பெண்களின் நலனுக்காக ஒரு முக்கியமான மற்றும் முன்னோடியான முடிவை நாங்கள் இப்போது எடுத்துள்ளோம். இது நேர்மறையான நீண்டகால பலன்களை வழங்கும்.

முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு சுயதொழிலைத் தொடங்க முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படும். வரும் செப்டம்பர் மாதம் முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.

ஆறு மாதத்துக்குப் பிறகு, ஒரு மதிப்பீடு நடத்தப்படும், அதன் பிறகு தேவைப்பட்டால் சிறப்பாக தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை கூடுதல் உதவி வழங்கப்படும். பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக மாநிலம் முழுவதும், கிராமங்கள் மற்றும் நகரங்களில் சந்தைகள் உருவாக்கப்படும்.

நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறையின் ஆதரவுடன், மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் இதற்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் தொடங்கும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பெண்களின் நிலையை மேலும் வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்திற்குள் சிறந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கும். இனி, மக்கள் வேலைவாய்ப்புக்காக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றும் நான் நம்புகிறேன” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.