“அமெரிக்க வரி நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” – நயினார் நாகேந்திரன்

திருப்பூர்: “நெருக்கடியில் உள்ள நமது ஏற்றுமதியாளர்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இது குறித்து திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்த ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இந்தப் பிரச்சினையை தெரிவித்தனர். அப்போது, ​வேலை இழப்புகளைத் தடுக்க மத்திய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி கொள்கைகளை வரையறுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஏற்றுமதி கொள்கைகளில் மாற்றம் எதன் அடிப்படையில் தேவை என்பதை முதல்வர் விளக்க வேண்டும். இது ஒரு சர்வதேச பிரச்சினை.

நமது ஏற்றுமதியாளர்கள் தற்போது நெருக்கடியில் உள்ளனர். இந்தச் சூழலில், ஏற்றுமதியாளர்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது. தற்போதைய சூழலில், மின் கட்டணம், சொத்து வரி போன்றவற்றில் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை முதல்வர் அறிவித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, அவரது எதிர்ப்பு அறிவிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்பு துபாய்க்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றார். அப்போது, ​​தமிழ்நாட்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் வந்ததாகக் கூறினார். பின்னர் ஸ்பெயின், அமெரிக்காவுக்கும் சென்றார். அமெரிக்காவிலிருந்து ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு உண்மையில் எந்த முதலீடுகளும் வந்ததாக நாங்கள் பார்க்கவில்லை.

எனவே, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் கண் துடைப்பு போன்றவை. எனவே, இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பேச்சுகள் முதிர்ச்சியற்றவை. அவரது அரசியல் பிரச்சார சுற்றுப் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தமாட்டார்” என்றார் நயினார் நாகேந்திரன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.