அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்ய கூடாது – அரசாணை சொல்வது என்ன?

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ‘ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று 2021 அக்டோபர் 11-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. தேவையான வழிகாட்டு நெறிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழ்நாடு அடிப்படை விதிகள், விடுமுறை விதிகளின்படி, தற்காலிக பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசு ஊழியர், ஓய்வுபெறும் நாளில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த பிரச்சினையை அரசு கவனத்துடன் ஆய்வு செய்து, மேற்கண்ட விதிகளில் உரிய திருத்தங்கள் செய்ய முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கிறதா, அந்த குற்றச்சாட்டு பணிநீக்கம் செய்வதற்கு உரியதுதானா என்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்பு ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் தேவையற்ற தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஒருவேளை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக உரிய முடிவு எடுக்க வேண்டும்.

விசாரணை நடவடிக்கைக்கு உரிய கால அளவை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கையை ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், நிர்வாக ரீதியிலான தாமதத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம். தவறு கண்டறியப்பட்டால் பணி இடைநீக்கம் செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.