Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. துலிப் டிராபி தொடர் நேற்று முன்தினம் பெங்களூருவில் தொடங்கிய உள்ள நிலையில், ஆசிய கோப்பையில் இடம்பெற்றிருக்கும் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டும் இதில் விளையாடி வருகிறார்கள். அவர்களும் முதல் போட்டியுடன் புறப்படுவார்கள்.
Add Zee News as a Preferred Source
Asia Cup 2025: செப்டம்பரில் நடக்கும் ஆசிய கோப்பை தொடர்
ஆசிய கோப்பை தொடர் இந்த முறை டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதன் பொருட்டு டி20ஐ வடிவில் தொடர் விளையாடப்படுகிறது. இறுதிப்போட்டியை சேர்ந்து மொத்தம் 19 போட்டிகள் செப். 9ஆம் தேதி முதல் செப். 28ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் ‘ஏ’ பிரிவிலும்; இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங் காங் அணிகள் ‘பி’ பிரிவிலும் விளையாட உள்ளன. முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். இதன் முடிவில் இருப் பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதிபெறும். இதிலும் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.
Asia Cup 2025: எகிறும் எதிர்பார்ப்பு
எனவே, முதல் சுற்றுக்கு பின் ஒவ்வொரு போட்டியும் அதிக சுவாரஸ்யத்தை அளிக்கும் எனலாம். அதுமட்டுமின்றி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்வது 99% உறுதி என்றாலும் பி பிரிவை பொருத்தவரை முதல் சுற்றில் வெளியேறப்போகும் அணிகள் எவை என்பதுதான் கவனிக்க வேண்டியது. ஆப்கானிஸ்தான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
Asia Cup 2025: செப். 4இல் புறப்படும் இந்திய அணி
முதல் சுற்றில் இந்திய அணியை பொருத்தவரை, வரும் செப். 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் அணியுடனும், செப். 14ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் மோதுகிறது. இரு போட்டிகளும் துபாயில் நடைபெற இருக்கிறது. செப். 19ஆம் தேதி அபுதாபியில் நடைபெறும் போட்டியில் ஓமன் உடன் இந்திய அணி மோதுகிறது. இதனால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வரும் செப். 4ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வாரத்திற்கு முன்னரே அங்கு தனது பயிற்சியை தொடங்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரியில் டி20ஐ போட்டியை விளையாடியது.
Asia Cup 2025: இந்த 5 பேர் பயணிக்க மாட்டார்கள்
தற்போது இந்திய அணி எந்த காம்பினேஷனில் விளையாடப்போகிறது, சூர்யகுமார் யாதவ் – கௌதம் கம்பீர் கூட்டணி இதுவரை தக்கவைத்து வரும் மேஜிக் இந்த தொடரிலும் தொடருமா என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. சஞ்சு சாம்சனை என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் பலரின் கேள்வியாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் இந்த 5 வீரர்கள் இந்திய அணியுடன் பயணிக்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ஆசிய கோப்பை தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒருவேளை இவர்களில் யாருக்காவது காயமடைந்தால் அவர்களுக்கு மாற்றாக இறக்க 5 மாற்று வீரர்களையும் பிசிசிஐ அறிவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்தான் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் 5 பேரும் இந்திய அணியின் பிரதான ஸ்குவாட் உடன் பயணிக்க மாட்டார்கள் என்றும் தேவையென்றால் மட்டும் அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Asia Cup 2025: பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு
கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெற்றது. அப்போது மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்ட சுப்மான் கில் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பிரதான ஸ்குவாட் உடன் பயணித்தார்கள். ஆனால் இம்முறை இந்த 5 வீரர்களும் பிரதான் ஸ்குவாட் உடன் பயணிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து குறுகிய நேரத்திலேயே விமானத்தில் சென்றுவிடலாம் என்பதால், வீரர்களுக்கு காயம் அல்லது பிற சிக்கல்கள் எழுந்தால் மட்டும் தேவைப்படும் வீரரை விரைவாக வரவழைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் அனைத்து வீரர்களும் மும்பையில் கூடி அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவதற்கு பதில் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல பிசிசிஐ அனுமதித்திருக்கிறது. எனவே காத்திருப்பு பட்டியலில் இருக்கும் இந்த 5 வீரர்களும் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.