புதுடெல்லி,
சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவது இல்லை. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. நிரந்தர நலன் மட்டுமே உள்ளது. உலகம் புதிய சவால்களுடன் வெகு வேகமாக மாறி வருகிறது. சுயசார்பு என்பது விருப்பமல்ல, தேவையானதாக மாறிவிட்டது என்பது தெளிவாகிறது. தற்போதைய வாழ்வின் நிர்பந்தமாகவும் ஆகிவிட்டது. நம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு இவை இரண்டிற்கும் தற்சார்பு என்பது அவசியம்.
2014ம் ஆண்டு பாதுகாப்புத்துறையின் நமது ஏற்றுமதி என்பது ரூ.700 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ரூ.24,000 கோடியாக எட்டி சாதனை படைத்துள்ளது. இறக்குமதியாளராக மட்டும் அல்லாமல் இந்தியா ஏற்றுமதியாளராக மாறிவிட்டதையே இது காட்டுகிறது.
எந்தவொரு எதிரி அச்சுறுத்தல்களையும் சமாளிக்க வான் பாதுகாப்பு கேடயம், தற்காப்பு மற்றும் தாக்குதல் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். சிந்தூர் நடவடிக்கையின் போது நாம் பார்த்தது போல, இன்றைய போர்களில் வான் பாதுகாப்பு திறனின் முக்கியத்துவம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சுதர்சன் சக்ரா திட்டம் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.