பீஜிங்,
ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அந்நாட்டுக்கு அவர் நேற்று சென்றார். இதன்பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசினார். ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து விட்டு சீனாவுக்கு புறப்பட்டார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 1-ந்தேதி) என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் அவர் சீனாவை சென்றடைந்து உள்ளார். அவருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன அதிபர் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சென்றுள்ள அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பின்னர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருக்கிறார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள சூழலில், இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
இதில், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சீனா சென்றுள்ள பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.