Manoj Tiwary : இந்திய அணியின் முன்னாள் பிளேயரான மனோஜ் திவாரி, தோனி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். குறிப்பாக, அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகளை தோனி கொடுக்கவில்லை என்றும், அவரால் தான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கனவு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். இப்போது மீண்டும் ஒருமுறை அந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ள அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சேவாக்கின் முக்கியப் பங்கைப் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், சேவாக் இரட்டைச் சதம் அடித்த பிறகும், தனக்காக தனது இடத்தைத் தியாகம் செய்ததாக திவாரி தெரிவித்தார். “வீரேந்தர் சேவாக் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் எனக்காகத் தனது இடத்தைத் தியாகம் செய்ததால்தான், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அந்தப் போட்டியில் நான் சதம் அடித்தேன். அந்தப் போட்டியில் நான் ஆட்டநாயகன் விருதையும் பெற்றேன்,” என்று திவாரி நேர்க்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
“சேவாக் அந்தத் தொடரில் இரட்டைச் சதம் அடித்திருந்தார். ஆனாலும் அவர் எனக்காக அந்தப் போட்டியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். இந்திய அணியில் எனக்கு நடந்த அநீதியை அவர் கவனித்திருக்க வேண்டும். அதனால், அவர் எனக்காக தனது நான்காவது பேட்டிங் இடத்தைத் தியாகம் செய்தார்,” என்றும் திவாரி தெரிவித்தார்.
தான் அணியில் இல்லாதபோது, சேவாக் தன்னை அழைத்துக் கேட்டதாகவும், தான் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று கேட்டபோது, தான் எந்த இடத்திலும் விளையாடத் தயார் என்று பதிலளித்ததாகவும் திவாரி கூறினார். ஆனால், சேவாக் தனது வழக்கமான நான்காவது இடத்திலேயே விளையாடச் சொன்னதாகவும், அந்தப் போட்டியின் கேப்டனான கௌதம் காம்பீரிடம் இதைத் தெரிவித்தார் என்றும் திவாரி குறிப்பிட்டார்.
இந்த ஆதரவு தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்ததாகவும், அந்தப் போட்டியில் தான் சதம் அடிக்க இதுவே முக்கிய காரணம் என்றும் திவாரி கூறினார். “சேவாக் எனக்காகச் செய்த உதவிக்கு நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்,” என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முன்னதாக, மனோஜ் திவாரி, தனக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததற்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியே காரணம் என்றும், தோனி தனக்கு அநீதி இழைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
S.Karthikeyan