என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025
என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது:
“இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) மிகவும் முக்கியமானது. நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நிரந்தர நலன்களே உள்ளன.
உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஸ்டெல்த் போர்க்கப்பல்கள்
ஐ.என்.எஸ். ஹிம்கிரி மற்றும் ஐ.என்.எஸ். உதய்கிரி உள்ளிட்ட, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரண்டு ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் தற்போது செயல்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.
தற்சார்பை முன்னிறுத்தி, நாடு இப்போது அனைத்து போர்க்கப்பல்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வருகிறது.
இந்திய கடற்படை இனி வேறு எந்த நாட்டிலிருந்தும் போர்க்கப்பல்களை வாங்காது; மாறாக, இந்தியாவிலேயே அவற்றை உருவாக்கும் என்று உறுதியளித்துள்ளது.
சுதர்ஷன் சக்ரா
மேலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘சுதர்ஷன் சக்ரா’ என்ற பாதுகாப்பு அமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்தது காரணமாக, உலகளவில் வர்த்தகப் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்தியா தனது தேசிய நலன்களில் சமரசம் செய்யாது. அதே நேரத்தில், எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவதில்லை.
உலக அரசியல் நிலையற்றதாக உள்ளதால், தற்சார்பு என்பது ஒரு சாதனை மட்டுமல்ல; அது ஒரு அவசியமாகவும் மாறிவிட்டது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய துல்லியமான தாக்குதல்களின் வெற்றி, உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் திறனை எடுத்துக்காட்டியுள்ளது.
2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ. 700 கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட ரூ. 24,000 கோடியாக உயர்ந்துள்ளது.
“இது, இந்தியா இறக்குமதியாளர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதைக் குறிக்கிறது” என்றார்.