US tariffs: “வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்துள்ளார்.

ஏன் இந்த வரி?

பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கிறார்கள் என்றும், பிற நாடுகளுடன் அமெரிக்காவிற்கு வர்த்தகத்தில் பற்றாக்குறை இருப்பதால் தான் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வரிகள் தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 கீழ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

நீதிமன்றம்
நீதிமன்றம்

நீதிமன்றத்தின் தீர்ப்பு

உலக நாடுகளின் மீதான இந்த வரிகளை எதிர்த்த வழக்கு நேற்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இது, ஏப்ரல் 2-ம் தேதி விதிக்கப்பட்ட பரஸ்பர வரி மற்றும் சீனா, மெக்சிகோ, கனடா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி குறித்த வழக்கு ஆகும்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது.” என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், ட்ரம்ப் அரசாங்கத்திற்கு அவகாசம் வழங்கியுள்ளனர்.

ட்ரம்ப் பதிவு

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:

“அனைத்து வரிகளும் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இன்று பெரிதும் பாகுபாடு காட்டிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தவறாக, இந்த வரிகள் விலக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆனால், அமெரிக்கா தான் கடைசியில் வெல்லும் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

இந்த வரிகள் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டிற்கு பேரழிவாக இருக்கும். இது நம்மை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும். நாம் வலுவாக இருக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் மேலும் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:

“இனியும் அமெரிக்கா, வர்த்தக பற்றாக்குறை, பிற நாடுகள் நம் மீது விதிக்கும் நியாயமற்ற வரிகள் ஆகியவற்றை பொறுக்காது.

அது நம் நண்பர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் பொருட்டல்ல.நமது தொழிலாளர்களுக்கும், அமெரிக்காவில் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் உதவ, வரி எப்போதும் சிறந்த ஆயுதம் ஆகும்.

பல ஆண்டுகளாக, பொறுப்பற்ற நமது அரசியல்வாதிகளால் நமக்கு எதிராக வரிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

இப்போது, உயர் நீதிமன்றத்தின் உதவியால், இந்த வரிகளை தொடர்ந்து அமெரிக்காவை வளமாக்குவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.