கட்டாக்,
ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பாங்கிர்போசி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணிடம், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை இருக்கிறது. அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். அதற்காக ஓரிடத்திற்கு வர வேண்டும் என கூறி 2 பேர் நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணை அழைத்தனர்.
அவர்களை நம்பி அந்த பெண்ணும் அவர்களுடன் காரில் சென்றுள்ளார். ஆனால், வேலை பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளனர். வீட்டில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உடாலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு அவர்கள் சென்றபோது, காரில் வேறு 3 பேர் ஏறியுள்ளனர்.
உடாலா மற்றும் பாலசோர் நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஆட்கள் இல்லாத தனியான பகுதிக்கு காரை கொண்டு சென்றனர். இதன்பின்பு, 5 பேரும் அந்த பெண்ணை கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை உடாலா சிறப்பு காவல் துறை உயரதிகாரி ருஷிகேஷ் நாயக் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், அந்த பெண்ணை காரில் இருந்து சாலையில் தூக்கி வீசி விட்டு சென்றனர். அந்த பெண் மெதுவாக எழுந்து ஊருக்கு சென்றுள்ளார். இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்த நாயக், 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்ற 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.