பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் விட்டல். வாடகை கார் ஓட்டுநரான இவர் 3 பேரை திருமணம் செய்து பின்னர் அவர்களை விட்டு பிரிந்திருக்கிறார்.
இந்நிலையில், அவருடன் வனஜாக்சி (வயது 35) என்ற பெண்ணுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இவருக்கும் இதற்கு முன்பு 2 முறை திருமணம் நடந்துள்ளது. அவரும் 2 கணவர்களையும் விட்டு விட்டு தனியாக வாழ்ந்திருக்கிறார்.
இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக நன்றாக சென்ற இவர்களுடைய வாழ்க்கையில் எமனாக குடிப்பழக்கம் வந்துள்ளது.
தினமும் விட்டல் குடித்து விட்டு வந்திருக்கிறார். பல முறை கூறியும் அதனை அவர் கைவிடவில்லை. குடித்து விட்டு வந்து வனஜாக்சியை அடித்து, துன்புறுத்தி இருக்கிறார். இதனால், அவரை பிரியும் முடிவை வனஜாக்சி எடுத்திருக்கிறார்.
இந்த சூழலில், கன்னட அமைப்பு ஒன்றின் உறுப்பினரான மாரியப்பா என்பவருடன் வனஜாக்சிக்கு நட்பு ஏற்பட்டது. அவருடன் ஒன்றாக சென்று வந்துள்ளார். அப்படி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, அதனையறிந்த விட்டல் ஆத்திரமடைந்து, அவர்களை பின்னால் துரத்தி சென்றுள்ளார்.
போக்குவரத்து சிக்னலில் அவர்களுடைய காரை வழிமறித்த விட்டல், திடீரென பெட்ரோலை எடுத்து காருக்குள் ஊற்றினார். அது ஓட்டுநர் உள்பட 3 பேர் மீதும் தெறித்தது.
நிலைமையை உணர்ந்து மற்ற 2 பேரும் வெளியே ஓட, வனஜாக்சியை விடாமல் விட்டல் துரத்தி சென்று, பெட்ரோலை அவர் மேலே ஊற்றி சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரால் நெருப்பை பற்ற வைத்து விட்டு தப்பினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்ற நபர் ஒருவர், அவரை மீட்க முயன்றார். இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது. எனினும், 60 சதவீதம் வரை தீக்காயம் அடைந்த வனஜாக்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி பெங்களூரு துணை ஆணையாளர் நாராயணா கூறும்போது, அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற நபரை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விட்டலுக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.