பிஆர்எஸ் கட்சியில் இருந்து தனது மகள் கவிதாவை கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது, தெலங்கானா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், கவிதாவின் அரசியல் எதிர்காலம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கைப்பாவையாக கவிதா செயல்படுவதாக பிஆர்எஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வர, அதனால் அவருக்கு எந்த அரசியல் ஆதாயமும் இருக்க வாய்ப்பில்லை. இப்போதைய ஒரே வழி, கவிதா தனக்கான அரசியல் ஆதரவை வலுப்படுத்துவது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கவிதா தெலங்கானாவில் நன்கு அறியப்பட்ட முகம். கே.சி.சந்திரசேகர ராவின் மகள் என்ற அடையாளமே போதும் அவர் அரசியல் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு. பல ஆண்டுகளாக தெலங்கானா அரசியல் களத்தில் அவர் ஈடுபட்டதால், அரசியல் அனுபவமும் இருக்கிறது.
தெலங்கானா அரசியல் களத்தில் எது எடுபடும், எதற்கு மவுசு இருக்காது என்ற ‘கள அரசியல் பல்ஸ்’ அறிந்தவர் கவிதா. மேலும், பிஆர்எஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கான அனுதாபிகளும் இருக்கின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் வரை இந்த ஆதரவு லிஸ்ட் நீளும் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அடிப்படையில் வழக்கறிஞரான அவர், மகளிர் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்று குரல் கொடுத்து வருபவராக இருக்கிறார்.
அரசியல் கட்சிகள் பரவலாக ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றன. பெண்களுக்கு சம வாய்ப்பு தருவதில்லை. அதில் பிஆர்எஸ்-ஸும் விதிவிலக்கல்ல என்பது அவருடைய நீண்டகால வாதம். அந்த வகையில் அவர் தனிக் கட்சித் தொடங்குவதில் அதிக முனைப்பு காட்டுவார் என்பது உறுதியாகிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தெலங்கானாவில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. இந்தச் சூழலில் கவிதா எப்படி தன்னைத் தானே அதுவரை கள அரசியலில் நீர்த்துப் போகாமல் வைத்திருப்பார் என்பது அவருக்கான மிகப் பெரிய சவால் என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.
கேசிஆரின் மகள், தெலங்கானா மக்களின் பரிச்சியமான முகம் என்பதெல்லாம் பலம்தான். ஆனால், அந்த பலம் மட்டுமே அவரே அரசியல் களத்தில் வலுவாக நிலைநிறுத்தி விடாது என்கின்றனர் இன்னொரு தரப்பினர். குடும்பத்துக்குள் ஏற்படும் அதிருப்தியால் இன்னொரு கட்சி தொட்ங்குவது எல்லாம் சக்சஸ் ஆகாத கதை. அதற்கு பக்கத்து மாநிலமே உதாரணம் என்று ஜெகன்மோகன் ரெட்டி – ஒய்.எஸ்.சர்மிளா சர்ச்சையை சுட்டிக் காட்டுகின்றனர்.
கேசிஆர் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பூகம்பம் ஜெகன் – சர்மிளாவுக்கு இடையேயானதுபோல் சொத்து பஞ்சாயத்தால் ஏற்பட்டதல்ல. மாறாக, மகளைக் காட்டிலும் மகன் தான் அரசியல் வாரிசுக்குப் பொருத்தமானவர் என்ற கேசிஆரின் பதவி அதிகார முடிவு சார்ந்தது. எதிர்ப்புகள் எப்படியிருந்தாலும், கேசிஆர் ஆசி பெற்றவரால் மட்டும்தான் பிஆர்எஸ் தலைவராக முடியும் என்பதே நிதர்சனம். இந்தப் பின்னணியில் கவிதா எதிர்நீச்சல் போடுவது அவர் திறமையைப் பொறுத்தது.
சஸ்பெண்ட் பின்னணி: பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தனது மகளும், நிஜாமாபாத் மேலவை உறுப்பினருமான கவிதாவை, தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் சஸ்பெண்ட் செய்து, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த முறை முதல்வராக இருந்த பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்ததால், தற்போதைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தியது. மேலும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
பிஆர்எஸ் ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணை, அப்போதைய ஆட்சியாளர்களால் கமிஷன் பெறப்பட்டு, தரமின்றி கட்டப்பட்டதாக தற்போதைய காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டி வருவதோடு, இதற்காக சிபிஐ விசாரணை தேவை என்றும் முடிவு செய்துள்ளது. இது தற்போது தெலங்கானாவில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. சிபிஐ விசாரணை தேவை என ரேவந்த் ரெட்டி அரசு தீர்மானித்ததை தொடர்ந்து, பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா தனது கட்சியினர் மீது தீவிர குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
“காலேஷ்வரம் அணை கட்டும்போது, தெலங்கானா மாநில நீர்வளத் துறை அமைச்சராக ஹரீஷ் ராவ் இருந்தார். மேலும், இதில் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சந்தோஷும் சம்பந்தப்பட்டுள்ளார். இவர்களால்தான் என்னுடைய தந்தையான கே.சந்திரசேகர ராவுக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
தற்போது சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது. இப்போதெல்லாம் சந்திரசேகர ராவை சுற்றிலும் என்னை குறை கூறும் கும்பல் மட்டுமே உள்ளது” என கவிதா தனது சொந்தக் கட்சியினர், உறவினர்கள் என்று பார்க்காமல் சரமாரியான குற்றச்சாட்டுகளை கடந்த திங்கட்கிழமை ஊடகத்தினர் முன்பு அடுக்கினார். இது தெலங்கானா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், முன்னாள் அமைச்சரான ஹரீஷ் ராவ், கவிதாவின் சொந்த தாய்மாமன் ஆவார் என்பது கவனிக்கத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, என்ன நடக்குமோ என எதிர்பார்த்திருந்த வேளையில், செவ்வாய்க்கிழமை பிஆர்எஸ் கட்சியின் செயலாளர்களான பரத் குமார் மற்றும் ரவீந்திரநாத் ராவ் ஆகியோர் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்ட நிஜாமாபாத் மேலவை உறுப்பினரான கே.கவிதா, பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இது அக்கட்சித் தொண்டர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து, கவிதா தனது அடிப்படை உறுப்பினர் பதவியையும், மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. மேலும் அவர் தெலங்கானாவில் புதிய கட்சியையும் தொடங்குவார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.