புதுடெல்லி: மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிடுவதற்கு குக்கி-ஸோ பழங்குடியின கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக குக்கி-ஸோ கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், மணிப்பூர் அரசுக்கும், உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொது போக்குவரத்துக்கும், அத்தியவாசியப் பொருட்கள் மாநிலத்துக்குள் வந்து செல்வதற்கும் தோதாக தேசிய நெடுஞ்சாலை எண் 2-ஐ திறந்துவிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குக்கி-ஸோ கவுன்சில், பாதுகாப்புப் படையினரும் முழு ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2023 மே மாதத்தில் மணிப்பூரில் குக்கி-ஸோ மற்றும் மைத்தேயி இரு இனக் குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை காரணமாக 60,000 பேர் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பலரும் இன்றளவும் வீடு திரும்ப முடியாமல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூர் – நாகாலாந்து இடையே மிக முக்கியமான இணைப்பாக உள்ள என்எச்-2 தேசிய நெடுஞ்சாலை கடந்த 2023 முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும். இதன்மூலம், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் துயரங்கள் சற்றே குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி – சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறக்கப்படுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது கவனம் பெறுகிறது.