அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட நாடுகளுக்கு வரி விலக்கு: உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சில வரி விலக்குகளை அளிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சில வரி விலக்குகளை அளிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

பிரிவு 232 தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பர வரிகளைக் குறைக்கும் வகையில், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 45-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு பூஜ்ஜிய இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்ட நாடுகளுக்கான இந்த வரி விலக்குகள் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இந்த உத்தரவில், “அமெரிக்காவில் வளர்க்கவோ, வெட்டவோ அல்லது இயற்கையாக உற்பத்தி செய்யவோ முடியாத அல்லது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்கள் மீது விலக்குகள் அளிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில விவசாய பொருட்கள், விமானங்கள் மற்றும் பாகங்கள், மருந்துகளில் பயன்படுத்த காப்புரிமை பெறாத பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம், கிராஃபைட், பல்வேறு வகையான நிக்கல், மயக்க மருந்து லிடோகைன் மற்றும் மருத்துவ நோயறிதல் சோதனைகளில் பயன்படுத்தப்படும் வினையாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு பூஜ்ஜிய வரிவிலக்கு அளிக்கப்படும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டால், ட்ரம்ப்பின் புதிய நிர்வாக உத்தரவு இல்லாமல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, வர்த்தகத் துறை மற்றும் சுங்கத்துறை ஆகியவை இறக்குமதி மீதான வரிகளை தள்ளுபடி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.