கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரைன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது.
இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதை கீவ் நகரின் நிர்வாக தலைவரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது. அதில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு வார காலத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிக தீவிர ட்ரோன் தாக்குதலில் இது இரண்டாவதாக அமைந்துள்ளது. தீ பற்றிய அரசு தலைமையக அலுவலக கட்டிடத்தில் உக்ரைன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வசிப்பதாக தகவல்.
உக்ரைன் பதில் தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் எண்ணெய் குழாய் வழிதடத்தை ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்கியது. இதை உக்ரைனின் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்துள்ளார்.
அண்மையில் உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்கிறது.