சென்னை,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எதிர்பார்த்தது போலவே சுப்மன் கில் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதனால் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். இந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் ஆசிய கோப்பையில் 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்குவார் என தெரிகிறது. ஏனெனில் 3-வது மற்றும் 4-வது வரிசையில் திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மாற்ற இயலாது. அதனால் சாம்சன் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் சாம்சனிடம் கொடுத்த 22 டக் அவுட் வாக்குறுதியை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காப்பாற்றியுள்ளதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் அதிகம் அசத்துகிறார் என்பதால் அவருக்கு அங்கே விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள் என்றும் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கும் ஆதரவால் நான் ஆச்சரியமடைந்தேன். மறுபுறம் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன். பயிற்சியாளர் மற்றும் கேப்டன் அவரை கவனித்துக்கொள்ளும் விதம் அற்புதமாக உள்ளது. சாம்சனை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சூரியகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னது களத்தில் தெரிகிறது. இருப்பினும் சாம்சன் பவர்பிளேயில் விளையாட வேண்டும்.
பவர் பிளேயில் ஒரு விக்கெட் விழுந்தால் அங்கே சாம்சன் சென்று விளையாட வேண்டும். இதுவே சஞ்சு சாம்சன் திட்டம். எனவே அவருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கொடுங்கள். அவரை நான் பேட்டி எடுத்தபோது 21 முறை டக் அவுட்டானாலும் 22வது போட்டியில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்று கம்பீர் சொன்னதாக சாம்சன் தெரிவித்தார். அது பயிற்சியாளர் மற்றும் சூர்யகுமாரால் அவருக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையாகும். அணி நிர்வாகம் அவர் என்ன கொண்டு வருகிறார் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பது தெளிவாகிறது” என்று கூறினார்.