காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
நேபாள நாட்டில் ‘ஜென் ஸி’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ’ஜென் ஸி’ இளைஞர்களின் ஆதரவுடன், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி கடந்த செப். 12ஆம் தேதி பொறுப்பேற்றார்.
இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார். இன்று பணிகளை தொடங்குவதற்கு முன்பு, ஜென் ஸி போராட்ட கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிடம் சுசீலா கார்கி மவுன அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஜென் ஸி தலைமுறையினரின் சிந்தனைக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஜென் ஸி குழு கோருவது ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி மற்றும் பொருளாதார சமத்துவம். அதை நிறைவேற்ற நீங்களும் நானும் உறுதியாக இருக்க வேண்டும்.
நான் இந்த பதவிக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் இங்கு வர விரும்பவில்லை. என் பெயர் தெருக்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதிகாரத்தை சுவைக்கும் நோக்கம் எனக்கு இல்லை. எந்த சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு ஆறு மாதங்களுக்கு மேல் பொறுப்பில் இருக்க மாட்டோம். அதற்குள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவோம். பின்னர் பொறுப்புகளை அடுத்த நாடாளுமன்றத்திடமும், அமைச்சர்களிடமும் உறுதியாக ஒப்படைப்போம்” என்றார்
நேபாளத்தில் நடந்த ஜென் ஸி போராட்டங்களில் 72 பேர் கொல்லப்பட்டனர், 191 பேர் காயமடைந்தனர். உலக வங்கியின் தகவல்களின்படி, நேபாளத்தில் 15-24 வயதுடையவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் வேலையில்லாமல் உள்ளனர். நேபாளத்தில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 1,447 டாலர் மட்டுமே ஆகும்.