India vs Pakistan: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களே பெரிதும் எதிர்பார்க்கும் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. இரு அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
Add Zee News as a Preferred Source
India vs Pakistan: இரு நாட்டுக்கும் இடையிலான பதற்றம்
இரு நாட்டுக்கும் இடையே அரசியல் ரீதியிலான பதற்றம் நிலவும் சூழலில், ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு இரு அணிகளும் விளையாட இருக்கின்றன. பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா விரைவாக தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து, இரு நாட்டுக்கும் இடையே தொடர் தாக்குதல்கள் நடந்தன. அதன்பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து பதற்றம் தணிந்தது. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்பை விட பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இந்தச் சூழலில்தான், இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
India vs Pakistan: போட்டி குறித்து கடும் விவாதம்
இந்தியா – பாகிஸ்தான் நடைபெறக்கூடாது, இந்திய அணி இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆங்காங்கே குரல் வந்துகொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதற்கு பதில் கொடுக்கும் வகையில், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் இரு நாடுகளும் மோதுவதில் தவறில்லை என்றும் குரல்கள் வருகின்றன.
India vs Pakistan: இந்திய அணி புறக்கணித்தால் என்ன ஆகும்?
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு என்னவாகும் என்ற கேள்வியும் அதிகமானோர் மனதில் எழுந்துள்ளது. இந்திய அணி இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்றால், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும், இந்திய அணி புள்ளிகளை பெறாது. இந்திய அணி இன்றைய போட்டிகளை புள்ளிகளை பெறாவிட்டாலும் கூட சூப்பர் 4 சுற்றுக்கு போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
India vs Pakistan: சூப்பர் 4 சுற்று போட்டி
குரூப் சுற்றில் இருப் பிரிவுகளில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா முறை மோதும். இதன் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அப்படியிருக்க, பாகிஸ்தான் (A1), இந்தியா (A2) அணிகள் சூப்பர் 4 சுற்றில் செப். 21ஆம் தேதி துபாயில் மோத வேண்டும். ஒருவேளை இந்த போட்டியை இந்தியா புறக்கணித்தாலும் பாகிஸ்தானுக்கே புள்ளிகள் கிடைக்கும்.
பாகிஸ்தான் ஆடமாலேயே ஜெய்த்துவிடும்
மேலும், சூப்பர் 4 சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களை பிடித்து பாகிஸ்தான், இந்தியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, அந்த போட்டியையும் இந்தியா புறக்கணித்தால், பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை தட்டிச்செல்லும். இந்திய அணி 2வது இடத்தில் நிறைவு செய்யும். அதாவது, பாகிஸ்தான் மூன்று முக்கிய போட்டிகளை விளையாடாமலே கோப்பையை அடிக்கும். நடப்பு சாம்பியனான இந்தியா பாகிஸ்தானிடம் கோப்பையை பறிகொடுக்க வேண்டி வரும்.
India W vs PakistanW: அடுத்து மகளிர் உலகக் கோப்பை
ஆசிய கோப்பையில் மட்டுமின்றி அடுத்து ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோத இருக்கின்றன. இந்த முறை மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது என்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது. பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். வரும் அக். 5ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அந்த தொடரில் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டியும் இலங்கையில்தான் நடைபெறும்.