நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025, இரண்டே நாளில் நிறைவேற்றப்பட்டு, அடுத்த நாளே குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது.
திறன், வாய்ப்பு அல்லது இந்த இரண்டின் அடிப்படையிலான எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் முற்றிலும் தடைவிதிப்பது இந்த சட்டத்தின் முக்கிய அம்சம்.

இதனால், ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் செயலியான ட்ரீம் 11 (Dream 11), இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகியது.
அதனால் ஸ்பான்சர் இல்லாமலேயே ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அபோல்லோ டயர்ஸ் (Apollo Tyres) நிறுவனம் ஒப்பந்தம் ஆகியிருக்கிறது.
இது குறித்து பி.சி.சி.ஐ (BCCI) தனது அறிக்கையில், “உலக அளவில் டயர் துறையில் முன்னணியில் இருக்கும் அப்பல்லோ டயர்ஸ், இந்திய அணியின் புதிய முன்னணி ஸ்பான்சராக பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
இது இந்திய கிரிக்கெட்டில் அப்பல்லோ டயர்ஸின் முதல் பயணத்தைக் குறிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், பி.சி.சி.ஐ இடைக்கால தலைவர் ராஜீவ் சுக்லா, “எங்களின் புதிய முன்னணி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒப்பந்த மதிப்பு மற்றும் ஒரு போட்டிக்கான தொகை எவ்வளவு?
2028 மார்ச் வரையிலான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.579 கோடி என கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் இந்திய அணி இருதரப்பு தொடரில் 121 போட்டிகளிலும், ஐசிசி தொடரில் 21 போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது.
இதில், இருதரப்பு தொடரில் ஒரு போட்டிக்கு ரூ. 3.5 கோடியும், ஐ.சி.சி தொடரில் ஒரு போட்டிக்கு 1.5 கோடியும் பி.சி.சி.ஐ அடிப்படைத் தொகையாக நிர்ணயித்திருந்த இலையில், தற்போது புதிய ஸ்பான்சர் அபோல்லோ டயர்ஸ் நிறுவனமானது, இருதரப்பு தொடரில் ஒரு போட்டிக்கு ரூ. 4.5 கோடியும், ஐ.சி.சி தொடரில் ஒரு போட்டிக்கு 1.72 கோடியும் அளிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.