தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பைச் சேரந்த முக்கியத் தீவிரவாதி ஒருவர் நேற்று பேசிய நிலையில், அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி உரை: மத்தியப் பிரதேசத்தின் தார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தில் பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்கள் உள்ளன. இன்று இந்த 4 தூண்கள் தொடர்பான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. நமது பெண்கள் சக்தி நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம். தாய் ஆரோக்கியமாக இருந்தால் முழு வீடும் நன்றாக இருக்கும். ஒரு தாய் நோய்வாய்ப்பட்டால், முழு குடும்பத்தின் அமைப்பும் நொறுங்குகிறது. அதனால்தான், ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம் எனும் பிரச்சாரம் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பாரத தாயின் பாதுகாப்புக்கு நாடு மிகுந்த முன்னுரிமை கொடுக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் குங்குமத்தை அகற்றினர். அதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்களை அழித்தோம். நமது துணிச்சலான ஆயுதப் படைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தன. நேற்று மற்றொரு பாகிஸ்தான் பயங்கரவாதி தனது துயரத்தை கண்ணீருடன் விவரித்ததை நாடும் உலகமும் கண்டது. இது ஒரு புதிய இந்தியா. இது யாருடைய அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது” என தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதியின் பேச்சு: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டரான மசூத் இலியாஸ் காஷ்மீரி என்பவர், பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் புடைசூழ மேடையில் பேசும் மசூத் இலியாஸ் காஷ்மீரி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் பாதிப்பு குறித்து உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.
அவர் தனது பேச்சில், “இந்த நாட்டின் (பாகிஸ்தானின்) எல்லைகளைப் பாதுகாக்க பயங்கரவாதத்தை தழுவினோம். டெல்லி, காபூல், கந்தஹார் மீது தாக்குதல்களை நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7-ம் தேதி பஹவல்பூரில் இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் மவுலானா மசூத் அசாரின் குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் பஹவல்பூரில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் முக்கிய கமாண்டர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தி இருப்பது, இந்திய ராணுவத்தின் தாக்குதலின் தீவிரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.