பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு. தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார். உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார். சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்.

யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார். அதனாலேயே அவர் நம் பெரியார் என்றானார். பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம், வாழ்க பெரியாரின் புகழ்” எனத் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று. அவர் வகுத்துத் தந்த சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

சுயமரியாதையின் சின்னம் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது. தமிழ்நாட்டின் சமூகநீதி நாளும் இன்று தான். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்குமான சமூகநீதியை வென்றெடுப்பதற்காக பெரியார் வகுத்துக் கொடுத்த சமூகநீதிப் பாதையில் பயணிக்கவும், போராடவும் இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட செய்தியில், “சிந்தனையும் செயலும் சமூக நீதிக்காகவே என்று வாழ்ந்த பெரியார் பிறந்த நாள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தரப்பினரை வல்லினச் சொற்களால் வாழவைக்க வந்தவர். மூடத்தனத்தின் பாலும், பழைய அடிமைத் தனங்களை நோக்கியும் நாடே நகரத் தொடங்கிவிடுமோ என்னும் அச்சம் நிலவும் இந்நாளில் நமது பற்றுக்கோடு பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக” எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர் பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சாதியக் கொடுமைகளை, சமுதாய பேதங்களை, பெண் அடிமைத் தனத்தை வேரோடு களைய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுயமரியாதை சுடரொளி பெரியார் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.