Asiacup 2025 IND VS Oman Playing 11: ஆசியக் கோப்பை 2025 தொடரில், UAE மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான மாபெரும் வெற்றிக்கு பிறகு, இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று செப்டம்பர் 19ம் தேதி ஓமன் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி அபுதாபியில் உள்ள மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக விளையாடுகிறது. எனவே இன்றைய போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து, இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் விளையாட வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கு விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது.
Add Zee News as a Preferred Source
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?
இந்த போட்டியின் முடிவு, புள்ளி பட்டியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்திய அணி தங்களது ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சிறப்பாகவே விளையாடி வருகிறது. எனவே அதில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த கில், இந்த போட்டியில் அதிக நேரம் களத்தில் செலவிட்டு தனது ஃபார்மை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்.
இந்த தொடரில் இதுவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத வீரர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர். எனவே, கேப்டன் சூரியகுமார் யாதவ், அவருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சூரியகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் களமிறங்குவார்கள். மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கும் பேட்டிங் வாய்ப்பு வழங்கப்படலாம். டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு ஷிவம் துபேக்கு ஓய்வளித்துவிட்டு, அவருக்கு பதிலாக, அதிரடி வீரர்களான ரிங்கு சிங் அல்லது ஜிதேஷ் ஷர்மா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.
பந்துவீச்சில் முக்கிய மாற்றம்
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு முக்கிய தூணாக இருக்க கூடிய ஜஸ்பிரி பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவருக்கு பதிலாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் 11ல் சேர்க்கப்படலாம். சர்வதேச டி20 போட்டிகளில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்த காத்து கொண்டு இருக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். இன்று 100வது விக்கெட்டை எடுக்கும் பட்சத்தில், அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை படைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் இடம் பெறுவார்கள். இவர்கள் கடந்த போட்டிகளில் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி தோல்வி அடைவதற்கு இவர்களின் பந்துவீச்சும் முக்கிய காரணம். சூப்பர் 4 சுற்றின் கடினமான போட்டிகளுக்கு முன்பு, தங்களது பெஞ்ச் வலிமையை சோதித்து பார்க்க, இந்திய அணிக்கு இந்த கடைசி லீக் போட்டி ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11
அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
About the Author
RK Spark