அதிமுகவுக்கு அமித் ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமர்சனம்

தூத்துக்குடி: அதிமுகவுக்கு அமித்ஷா வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கே.சங்கரன், ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது: தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகிறது பாஜக அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார். லண்டனுக்கு சென்று தான் அண்ணாமலை அரசியல் படிக்க வேண்டுமா? இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கம்யூனிஸ்ட்களை பார்த்து, முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள், திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார். திமுக பாம்பும் இல்லை, கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை.

நீங்கள் தான் தவளை. பாஜக எனும் பாம்பு உங்களை விழுங்கிக்கொண்டு இருக்கிறது. நீங்க உங்கள் கட்சியை கவனியுங்கள். கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார். அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி தர்மத்தை விட மக்கள் தர்மம் தான் முக்கியம். கூட்டணி வைப்பதும் மக்களின் நலனுக்காக தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அப்போது எந்த கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம். இவ்வாறு வாசுகி பேசினார்.

திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், ஆர்.ரசல், ஆர்.பேச்சிமுத்து, எஸ்.அப்பாதுரை, டி.ராஜா, டி.சண்முகராஜ், மாநில குழு உறுப்பினர் பி.பூமயில் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.