‘உடனே திரும்புவீர், அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்’ – எச்1பி விசா உள்ளோருக்கு நிறுவனங்கள் அலர்ட்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, எச்1பி விசா வைத்திருப்போர் அனைவரும் குறைந்தது 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் வசிக்கும் ஊழியர்கள் 24 மணி நேரத்துக்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்றும் மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

எச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் தங்கள் ஊழியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்படுவதைத் தவிர்க்க 24 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. மேலும், எச்1பி விசா மற்றும் எச்4 விசா வைத்திருப்பவர்கள் புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் குறித்து புரிந்துகொள்ளும் வரை குறைந்தது இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்றும், சிறப்பான எதிர்காலத்துக்காக வெளிநாடுகளில் உள்ள ஊழியர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை மின்னஞ்சல்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளன.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது குறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்காக மட்டுமே இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5-ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. முன்னதாக, எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “இந்தக் கட்டண உயர்வு காரணமாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இனி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்காது. அவர்கள் இனி அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிப்பார்கள். அதுபோல, இனி அமெரிக்கர்களுக்கே அவர்கள் பயிற்சியும் அளிப்பார்கள். நமது வேலைகளை பறிக்க வெளிநாடுகளில் இருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுவனங்கள் நிறுத்தவேண்டும். அதுதான் எங்களின் கொள்கை” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.