வாஷிங்டன் டி.சி.,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது.
21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், காசா பகுதியில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
எனினும், நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகம், ரூ.56 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை இஸ்ரேலுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் 30, ஏ.எச்.-64 அபாசே ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 3,250 கவச வாகனங்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 606 கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள் ஆகியவை வழங்கப்படும்.
காசா நகரில் ஹமாஸ் அமைப்பின் இலக்குகளை குண்டு வீசி தகர்க்கும் கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. எண்ணற்ற புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், தங்களால் தப்பி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது என கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், இஸ்ரேலின் தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில் இந்த ஒப்புதல் அமையும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் ஐ.நா. பொது சபையின் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காசா விவகாரம் பற்றி உயர்மட்ட கூட்டம் நடைபெறும். இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த ஒப்புதல் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.