கொழும்பு,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். சூப்பர்4 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டம் நடந்து கொண்டிருந்தபோது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே (வயது 54) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் குறித்து ஆட்டம் முடிந்ததும், பயிற்சியாளர் ஜெயசூர்யா, துனித் வெல்லாலகேவிடம் தெரிவித்தார். இதனால் அவர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
இதனையடுத்து அவசரமாக தாயகம் திரும்பிய அவர் நேற்று தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்து முடித்தார். உடனடியாக துபாய் கிளம்பும் அவர் இன்று காலை அணியுடன் இணைந்து விடுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. துனித் வெல்லாலகேவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.